நாமலைக் கைது செய்தாலும் அடக்குமுறைகளால் மக்களின் எழுச்சியை முடக்கவே முடியாது : பொதுஜன பெரமுன எச்சரிக்கை
தற்போதைய அரசின் அடக்குமுறைகளினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணையும் திருப்புமுனை நாளாக செப்டெம்பர் 12ஆம் திகதி அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பு, பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறைபிடிக்கப்பட்ட நாமல்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"அரசின் செயலற்ற தன்மையையும், எதிர்க்கட்சியினரை அடக்குமுறைகள் மூலம் சிறையில் அடைக்கும் செயற்பாடுகளையும் கண்டித்து, ஆயிரக்கணக்கான மக்கள் செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஒன்றுதிரள உள்ளனர்.

விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்காகவும் குரல் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சிறைப் பிடிக்கப்பட்டதன் மூலமும், அநுராதபுரம் விளையாட்டு மைதானத்தை வழங்க மறுத்ததன் மூலமும் இந்தக் கூட்டத்தை சீர்குலைக்க அரசு முயன்றது.
அரசின் பொய் வாக்குறுதிகள்
இருப்பினும், இத்தகைய அடக்குமுறைகளால் மக்களின் வருகை இருமடங்காக அதிகரிக்கும். நாட்டின் சுகாதாரத்துறை முற்றாகச் சீர்கேடு அடைந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 'கீமோதெரபி' சிகிச்சைகளுக்கான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன.

அரசின் தவறான கொள்கைகளால் தரம் குறைந்த மருந்துகளையே மக்கள் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் பொய் வாக்குறுதிகளுக்கு இனி மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.
இந்த அரசுக்கு எதிரான மக்களின் உண்மையான எதிர்ப்பு மற்றும் ஆத்திரம் செப்டெம்பர் 12 அன்று அமையவுள்ள பேரணியில் தெளிவாக வெளிப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.