சுரேஷ் சலேவுக்காக நாமல் செய்த பூஜை! கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சன் தொடர்பிலும் சபையில் கேள்வி
விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடலை பயன்படுத்திய அரசியல்வாதிகளை விட்டுவிட்டு, கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை கைது செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்தினர்.
அரசியல் பழிவாங்கல்
விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களை குறித்த அரசியல்வாதிகள் அதிகமாக பகிர்ந்து வந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை.
ஆனால், அதே போன்றதொரு பாடலை பாடினார் என்பதற்காக கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சன் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு சார்பான வகையில் இந்த அரசாங்கம் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அவருக்காக தாம் விசேட பூஜைகள் செய்ததாகவும், இதில் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது என்றும் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் கேள்வி எழுப்பினார்.