சித்தப்பாவுடன் நாட்டை முன்னேற்ற முடியாத நாமலும் தேசிய பேரவையில்-முஜிபுர் ரஹ்மான்
சித்தப்பா கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற முடியாது போன நாமல் ராஜபக்ச, தேசிய பேரவையில் திட்டங்களை உருவாக்க நியமித்திருப்பது நாட்டுக்கு நகைச்சுவை வழங்கும் விடயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொது இணக்கத்தை முன்வைத்தால் ஒத்துழைப்பை வழங்க முடியும்

தேசிய பேரவை தொடர்பில் விமர்சன ரீதியான கொள்கை ஐக்கிய மக்கள் சக்தி இருக்கின்றது. அரசாங்கம் குறிப்பிட்ட காலத்திற்கு பொது இணக்கத்தை முன்வைத்தால், அப்படியான வேலைத்திட்டத்திற்கு பதவிகளை பெறாது ஒத்துழைப்பை வழங்க முடியும்.
நாமல் ராஜபக்ச உருவாக்க போகும் திடடம் என்ன?

தனது சித்தப்பாவான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுடன் இணைந்து முன்னேற்ற முடியாது போன நாமல் ராஜபக்சவும் தேசிய பேரவையின் ஊடாக நீண்ட மற்றும் குறுகிய கால தீர்வுகளை முன்வைக்க குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உருவாக்க போகும் திட்டம் என்ன?.
எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுகிறோம் என்று சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. தேசிய பேரவை என்பதும் அப்படியான ஒரு ஏமாற்று வேலை எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.