நல்லூர் நீர்க் கண்காட்சியை கற்றல் களமாக மாற்றிய வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் கற்கைநெறி மாணவர்கள்
நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் WASPAR & Young Water Professionals இன் ஏற்பாட்டில் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் வரும் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகிறது.
20.08.2025 புதன்கிழமை காலை 10 மணியளவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவிகள் 75 பேர் தங்கள் விஞ்ஞான ஆசிரியர்களுடன் வருகை தந்து கண்காட்சி அரங்கை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
சிறப்பு காட்சிப்படுத்தல்
ஊருணி அரங்கில் நேற்றுமுன் தினம் மதியம் வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் கற்கைநெறியின் இறுதியாண்டு மாணவர்களுக்காக இடம்பெற்ற சிறப்பு காட்சிப்படுத்தல் மற்றும் இயற்கை பற்றிய தொடர்பாடல் சார்ந்த கற்கைநெறியின் போது குறித்த கண்காட்சியை காண வந்திருந்த பன்னாட்டு நீர்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்களுடன் வவுனியா பல்கலையின் மாணவர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பை மையமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச நீர் முகாமைத்துவத்துக்கான ஆய்வு நிறுவனம் சார்பில் டிமுத்து மலால்கொட, மகேஷ் ஜம்பானி, வடமாகாணத்தின் ஓய்வுநிலை நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சண்முகானந்தன், இந்த செயற்திட்டத்தோடு நீண்டகால தொடர்பில் இருக்கின்ற யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பற்றிய ஆய்வை நிகழ்த்திய அறிஞர் ஜே.புந்தகேவும் வருகை தந்திருந்தார்கள்.
நீர்க் கண்காட்சி
அவர்கள் நீர்க் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டதோடு அதில் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ள விடயங்களின் பெறுமதியை புரிந்தவர்களாக பாராட்டுக்களை வழங்கி அவர்கள் விடைபெற்றார்கள்.
இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர்கள் யாழ்ப்பாண நிலத்தடி நீரின் தனித்துவம் மற்றும் இன்று அது ஏதிர்நோக்கியுள்ள ஆபத்து நிலைமைகளை உணர்ந்தவர்களாகவும், தமிழர்களின் பாரம்பரிய நீர் சார்ந்த விடயங்களை கற்றுக் கொண்டவர்களாகவும் கண்காட்சி அரங்கை விட்டு வெளியேறினர்.








