உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க திமோர்-லெஸ்டே பயணமாகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு இன்று (செப்டம்பர்) 6 ஆம் திகதி திமோர் - லெஸ்டேயின் திலி நகருக்குப் புறப்படுகிறது.
செப்டம்பர் 7 முதல் 10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்
மேலும் 2025ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 78வது அமர்வில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமர்விலும் தலைவராகச் செயல்படுவார்.
அத்துடன் இலங்கைத் தூதுக்குழுவில் சுகாதார அமைச்சகச் செயலாளர் மருத்துவர் அனில் ஜசிங்க உட்பட அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சிறப்பு மருத்துவச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதி செய்யும் ‘திலி பிரகடனத்தை’ ஏற்றுக்கொள்வது குறித்து இம்மாநாட்டில் பரிசீலிக்கப்படுவதுடன் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, எண்ணிம சுகாதாரம் (Digital Health), செயற்கை நுண்ணறிவு, மீள்திறன் கொண்ட சுகாதார வசதிகள் மற்றும் காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
பிராந்திய ஒத்துழைப்பு
மேலும் நாட்டின் இலவச சுகாதாரச் சேவை அனுபவங்களையும் பிராந்திய ஒத்துழைப்புக்கான முன்மொழிவுகளையும் இலங்கை முன்வைக்கும்.
இந்த பயணத்தின் போது இந்தியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ் பூட்டான், இந்தோனேசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும், WHO பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸுடனும் அமைச்சர் தனிப்பட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri