பத்து மாதங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள்: வெளியான திடுக்கிடும் தகவல்
2025 ஜனவரி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரை பெரும் தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு 187,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசியத் திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் இன்று (2025.10.23) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு உரையாற்றிய அமைச்சர்,
“2025 ஜனவரி முதல் ஒக்டோபர் 21ஆம் திகதி வரையான பத்து மாதங்களில் ஹொரோயின் 1481 கிலோ கைப்பற்றப்பட்டு 58,130 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருட்கள்
மேலும் கொக்கேய்ன் 32 கிலோவுடன் 91 வழக்குகளும் ஐஸ் போதைப்பொருள் 2500 கிலோவுடன் 66,593 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கஞ்சா மற்றும் கேரள கஞ்சா 14,400 கிலோ கண்டுபிடிக்கப்பட்டு 58,721 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், போதை மாத்திரைகள் முப்பது இலட்சமும் போதை உருண்டைகள் ஆறு இலட்சத்தோடு 28,808 வழக்குகள் உள்ளன.
வேறு போதைப்பொருட்கள் 500 கிலோவுடன் 1,477 வழக்குகள் உள்ளன. இவ்வாறு போதைப்பொருள் இந்நாட்டில் பல்கி பெருகி பரவலடைந்துள்ளது.
கொள்கைகளில் மாற்றுக் கருத்து
போதை பொருட்கள் சாதாரணமாக வருவதில்லை. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் கறைபடிந்த அரசியல், கறுப்பு பணம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.
இது மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் அச்சுறுத்தலாகும். அந்த அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம்.
எதிர்க்கட்சியினருக்கு எமது பொருளாதார கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இதற்கான திட்டங்களை முறியடிப்பதிலேயே நீங்கள் குறியாக இருக்கின்றீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



