நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையில் புதிய மாற்றம்..! பயணிகளுக்கு காத்திருக்கும் சிறப்பு சலுகை
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசனத்துறை இடையே இயக்கப்படும் “சுபம் ஃபெர்ரி” (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கு என பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று(04.11.2026) காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்திலேயே இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கட்டணக் குறைப்பு
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் 5,500 ரூபாய் ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

அவ்வாறு இல்லாமல், 30 கிலோ கிராம் விட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: இதற்கமைய, 5 கிலோ கிராம் 5,250 ரூபாய் ஆகவும், 10 கிலோகிராம் 8,750 ரூபாய் ஆகவும், 30 கிலோ கிராம் 6,000 ரூபாய் ஆகவும் அறிவிடபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம் என்றும் அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பயணக் கட்டண விபரங்கள்
நாகப்பட்டினம் - காங்கேசனத்துறைக்கு செல்லும் பெரியவர்களுக்கு 5 500 ரூபாயும், குழந்தைகளுக்கு 5000 ரூபாயும், காங்கேசனத்துறை - நாகப்பட்டினம் Pre Eco - பெரியவர்களுக்கு 6000 ரூபாயும், Pre Eco - குழந்தைகளுக்கு 5 500 ரூபாயும் அறிவிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கடந்த வருடம் போன்று, இந்த வருடமும் மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.