மட்டக்களப்பில் முன்னாள் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் கைது
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் முன்னாள் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவருமான சங்கரப்பிள்ளை நகுலேஸ் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று (25.11.2023) உத்தரவிட்டுள்ளார்.
வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மாவீரர்களின் பெற்றோர் ஒன்று கூடினர்.
இந்த நிலையில் வெல்லாவெளி பொலிஸார் குறித்த காரியாலயத்துக்கு சென்று மாவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு சட்டவிரோதமானது நிகழ்வை நிறுத்துமாறு தெரிவித்து நீதிமன்ற தடை உத்தரவை மீறி சட்டவிரோத ஓன்று கூடல் செய்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உபதலைவர் ச.நகுலேஸ் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட அவரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்தி - சரவணன்
முதலாம் இணைப்பு
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது வெல்லாவெளி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அவ்விடம் வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களை அழைத்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி இந்நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
மாவீரர் தின வாரத்தில் அதனுடன் தொடர்புபட்ட எந்த நிகழ்வுகளையும் செய்ய முடியாது என்ற விதத்தில் இத்தடையுத்தரவு பெறப்பட்டு இன்று பிற்பகல் இத்தடையுத்தரவு தொடர்பிலான விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையால் நீதிமன்றத்திற்கு சமூகமளித்து தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைக்குமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தினை நாடி இத்தடையுத்தரவினை நீக்கி நிகழ்வினை குறித்த தினத்திலேயே முன்னெடுப்பதற்கு ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவத்தனர்.
இந்த நிலையில் திடீரென பொலிஸார் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் நிகழ்வுக்காக வைத்திருந்த நிகழ்வு தொடர்பான பதாகைகளை அகற்றியதுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உபதலைவரையும் கைதுசெய்து பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதேநேரம் வெல்லாவெளியில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அலுவலகத்தினை சூழ பெருமளவான பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வுக்கு வந்தவர்களிடம் வாக்குமூலம் எடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |