முல்லைத்தீவில் மர்மமாக உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பிலான காரணம் வெளியானது
முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் மர்மமாக உயிரிழந்த யோகராசா நிதர்ஷனாவின் உயிரிழப்புக்கு, சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே காரணம் என பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியினால் நடத்தப்பட் பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடையார்கட்டு – மூங்கிலாறு கிராமத்தில் வசித்து வந்த யோகராசா நிதர்ஷனா, தனது வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற வேளையில், கடந்த 15ம் திகதி காணாமல் போயிருந்தார்.
பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டதுடன்,சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவிலுள்ள, கைவிடப்பட்ட காணியிலிருந்து சிறுமியின் சடலம், உருக்குலைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் வலது கை இல்லாத நிலையிலேயே, சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.
இதேவேளை, சடலம் மீதான பரிசோதனையில் சிறுமி 2 மாத கருவுற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா? கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - குமணன்