கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் முன்னிலை !
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் நேற்று, 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உட்பட பதவிவழி உறுப்பினர்களும் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர்.
புள்ளிகளின் அடிப்படையில் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் முதல் நிலையிலும், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், செளக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
பேரவையினால் முன்மொழியப்பட்டவர்கள்
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வார்.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் பதவிக் காலம் கடந்த ஜனவரி 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் கடந்த வருடம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவைக் கூட்டம் நடாத்தப்பட்டு, முன்னணி பெற்ற மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அந்த முடிவுகளை நிராகரித்து புதிதாகத் தெரிவை நடாத்துமாறு கோரியிருந்தார்.
அத்துடன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகா பதவிக்கு வந்த பின்னர், ஜனாதிபதியினால் கிழக்கு பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக எவரும் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவுற்ற பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பதில் துணைவேந்தர்களை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |