சங்கீத் விஜேசூரியவுக்கு நிதி அமைச்சராக அறிமுகப்படுத்தப்பட்ட மர்ம நபர்..! இழக்கப்பட்ட பெருந்தொகை டொலர்கள்
உலகச்சந்தையில் எரிபொருள் விலை 26 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது மற்றும் அநீதியானது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று எத்துல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
உலகச்சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
"கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகச் சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டில் விலை உயர்த்தப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், தற்போதைய விலை அதிகரிப்பு எந்த வகையிலும் நியாயமற்றது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி உலகச் சந்தையில் 114 டொலராகக் காணப்பட்ட பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை, மே 29ஆம் திகதியளவில் 84 டொலர் வரை, அதாவது 30 டொலரால் (26%) வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் இந்த விலைக்குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்கி வரும் நிலையில், இலங்கையில் மாத்திரம் தலைகீழாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் விலை கூடினாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும், உலகச்சந்தையில் விலை குறைந்தாலும் உள்நாட்டில் விலை அதிகரிக்கும் ஒரு விசித்திரமான விலை சூத்திரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
இலங்கை தனக்கான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை மத்திய கிழக்கிலிருந்து அல்லாமல் சிங்கப்பூரிலிருந்தே இறக்குமதி செய்கிறது. இதனால் செங்கடல் அல்லது ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமான கூடுதல் காப்புறுதிக் கட்டணங்கள் இலங்கைக்குப் பொருந்தாது.
பின்னணியில் அரசியல்வாதிகள்
இவ்வாறான பின்னணியில், உலகிலேயே மிக அதிக விலைக்கு டீசலை இலங்கை கொள்வனவு செய்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட பாரிய ஊழல் மற்றும் தரகுப் பணம் ஒளிந்திருக்கின்றது.

இந்த ஊழல் நட்டத்தை மக்களின் தலையில் சுமத்தாமல், ஜே.வி.பி கட்சியின் பெலவத்தை தலைமையக நிதி மூலமே அரசாங்கம் ஈடுசெய்ய வேண்டும்.
இதேவேளை, கலைஞர் சங்கீத் விஜேசூரிய தனது பிரித்தானிய நண்பர் மூலம் நாட்டிற்குக் கொண்டுவந்த 23 மில்லியன் டொலர் நன்கொடையை, 'சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி டொலர் நன்கொடைகளை ஏற்க முடியாது' எனக் கூறி அரசு நிராகரித்துள்ளது.
தற்போதைய உத்தியோகபூர்வ வர்த்தமானியின்படி நிதி அமைச்சர் பதவியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவே வகிக்கும் சூழலில், சங்கீத் விஜேசூரியவுக்கு 'நிதி அமைச்சர்' என ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மர்ம நபர் யார் என்று கேள்வி எழுப்புகின்றேன்.
மர்ம நபரின் தன்னிச்சையான செயல்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைத் தாம் முழுமையாகப் படித்துள்ளேன். அதில் வெளிநாட்டு நன்கொடைகளைத் தடை செய்யும் எந்தவொரு நிபந்தனையும் இல்லை.
இந்த மர்ம நபரின் தன்னிச்சையான செயலால் நாட்டுக்கு வரவிருந்த பெரும் டொலர் இருப்பு அநியாயமாக இழக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கனடா மற்றும் சர்வதேசக் கிளைகளிலிருந்து வரவிருந்த நிதிகளுக்கும், உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்படும் டொலர்களைக் கொண்டுவர முடியாமல் போனதற்கும் இந்த 'ஐ.எம்.எவ். உடன்படிக்கை'யையே அரசு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப் பார்க்கின்றது.
எனவே, இந்த மர்ம நபரைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதோடு, 2024ஆம் ஆண்டு முதல் ஐ.எம்.எவ். உடன்படிக்கையைக் காட்டி நாட்டுக்கு அநியாயமாக இழக்கப்பட்ட ஒட்டுமொத்த டொலர் நிதிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்காக, உடனடியாக 'ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு'வொன்றை நியமிக்க வேண்டும் என்றார்.
உடன் வைத்திய உதவியை நாடவும்! அறிகுறிகளுடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri