ஈச்சிலம்பற்று கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் நாட்டு தெப்பம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் கடற்கரையில் இன்று (14.1.2026) காலை வினோதமான தெப்பம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
மரத்தினால் நேர்த்தியாகச் செய்யப்பட்ட இந்தத் தெப்பம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
கரையொதுங்கியுள்ள இந்தத் தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து கடலில் விடப்பட்டு, நீரோட்டம் காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பௌத்த மத அடையாளங்கள்
தெப்பத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுகின்றன.

பௌத்த மத ஆசாரங்களின்படி விசேட பூஜைகள் செய்யப்பட்டு, நேர்த்திக்கடனாக அல்லது மத வழிபாட்டின் ஒரு அங்கமாக இது கடலில் விடப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
முதற்கட்ட விசாரணை
இது தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஈச்சிலம்பற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தெப்பத்தின் பின்னணி குறித்தும், அது எவ்வாறு இலங்கைக்கரைக்கு வந்தது என்பது குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.