மியன்மாரில் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
மியன்மாரில் இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing), அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு தனது முதல் உத்தியோகபூர்வ நடவடிக்கையாக 4,300 க்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதில் நீண்டகாலமாகச் சிறையிலுள்ள முன்னாள் தலைவி ஆங் சாங் சூகியின் (Aung San Suu Kyi) தண்டனை ஆறில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் மைண்ட் (Win Myint) முழுமையாக மன்னிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சுமார் 27 ஆண்டுகால சிறைத்தண்டனை
மியன்மாரின் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுமார் 27 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் 80 வயதான நோபல் பரிசு வென்ற ஆங் சாங் சூகி, தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்படுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், விடுவிக்கப்படவுள்ளவர்களில் 179 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
மியன்மாரில் கடந்த 2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு சுமார் 30,000 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆங் சாங் சூகி உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam