இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்!
சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற இரசாயனம் நிறைந்த சரக்குக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் மூழ்கி வருகிறது.
சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குறித்த கப்பல் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீவிபத்துக்குள்ளானது.
இதனையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டாக இணைந்து கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் மற்றும் கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
எனினும், அப்போது நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதனால் குறித்த கப்பல் முழுமையாக தீயில் எரிந்து போனது.
இந்நிலையில், கடல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் குறித்த கப்பலை மூழ்குவதற்கு முன்னர் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும், கப்பலின் பின்பகுதி தரையில் மோதியதாகவும், இதனால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கேப்டன் இந்திகா சில்வா பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கப்பல் கடலில் மூழ்கினால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் நிபுணர் வைத்தியர் அஜந்தா பெரேரா பிபிசியிடம் கூறியுள்ளார்.
இந்த கப்பல் கடலில் மூழ்கினால் கப்பலில் இருக்கும், அனைத்து ஆபத்தான பொருட்கள், நைட்ரிக் அமிலம் மற்றும் இதர விஷயங்கள் மற்றும் கப்பலில் உள்ள எண்ணெய் ஆகியவை கடலின் முழு அடிப்பகுதியையும் அழித்துவிடும்" என்று அவர் கூறினார்.
கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அதை ஆய்வு செய்ய டைவர்ஸ் கீழே அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், "சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இப்போது எங்கள் கடற்பரப்பில் இருக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் மிக அழகிய கடற்கரைகளில் சிலவற்றின் சொந்த இடமான நீர்கொழும்பு நகருக்கு அருகிலுள்ள கரையோரப் பகுதி ஏற்கனவே எண்ணெய் மற்றும் குப்பைகளால் மாசுபடுவதை அண்மையில் காணமுடிந்தது.
இதற்கிடையில், நீர்கொழும்பு குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பானந்துறை முதல் நீர்கொழும்பு வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கப்பல் கடலுக்குள் மூழ்கினால் “மீன்பிடி தொழிலுக்கு மரண அடியாக” இருக்கும் என பிராந்திய மீன்பிடி சங்கத்தின் தலைவர் ஜோசுவா அந்தோணி தெரிவித்துள்ளார்.
"நாங்கள் கடலுக்குச் செல்ல முடியாது, அதாவது எங்களால் வாழ முடியாது" என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். இதேவேளை, எக்ஸ்-பிரஸ் ஷிப்பிங் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமாகும்.
குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிடம் குறித்த கப்பல் நங்கூரமிடுவதற்கு கோரிய போது அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கை, குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் பல்வேறு விமசனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.