மூதூர் மீனவர்களின் வாழ்வாதாரப் போராட்டம்
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், பல தலைமுறைகளாகத் தாங்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு (Global Sea Food) வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக மீட்டுத் தருமாறு கோரியும் இன்று ஒரு பிரம்மாண்டமான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மூதூர் தஹ்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி வழியாகப் பயணித்தது. இறுதியில், மீனவர் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுவினை மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச செயலாளருக்காக மூதூர் பிரதேச உதவிச் செயலாளர் ரொஸானாவிடம் கையளித்தனர்.
அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், மற்றும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தோர் பெருந்திரளாகக் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பாரம்பரிய கடல் எல்லைகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்துக்குச் சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், இந்தக் காணி ஒதுக்கீட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். "நாங்கள் தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமும் அநியாயமும் ஆகும்.
இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்," எனத் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். தங்கள் பாரம்பரிய உரிமைகளை மீட்டுத் தரும் வரை இந்தப் போராட்டங்களைத் தொடரப்போவதாகவும் மீனவர்கள் உறுதியளித்தனர்.




