பிரித்தானியாவில் இரட்டிப்பாக உயிரிழப்பை ஏற்படுத்தும் உருமாறிய கோவிட் வைரஸ்! - ஆய்வில் வெளியான தகவல்
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள உருமாறிய கோவிட் - 19 வைரஸ் இரு மடங்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் மிக வேகமாக கோவிட் - 19 தொற்று பரவியது. இது குறித்த ஆய்வின் போது உருமாறிய கோவிட் -19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த உருமாறிய கோவிட் -19 வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவியதை அடுத்து, டிசம்பர் மாதம் பிரித்தானியாவில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த உருமாறிய கோவிட் -19 வைரஸ் முன்பை விட 70 வீதம் வேகமாக பரவக் கூடியது என தெரிவிக்கப்பட்டதுடன், அதிக பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிய உருமாறிய கோவிட் - 19 வைரஸ் தொற்று குறித்து பிரித்தானிய ஆய்வாளர்கள் தொடர்ந்தும் ஆய்வு செய்து வந்தனர். இது குறித்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆய்வு முடிவுகளின்படி உருமாறிய கோவிட் - 19 வைரஸ், ஏனைய வைரஸ் வகைகளை விட 30 முதல் 100 வீதம் வரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,926 பேருக்கு கோவிட் - 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 190 கோவிட் - 19 மரணங்களும் பதிவாகியுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,234,924 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 124,987 ஆக பதிவாகியுள்ளது.