முஸ்லிம் மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள புதிய இணையத்தளம்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய முயற்சியாக முஸ்லிம் மக்களுக்கான புதிய இணையத்தளம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அங்குரார்பண நிகழ்வு
புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க(vidura wickramanayaka) பிரதம அதிதியாக கலந்து உத்தியோகபூர்வமாக இணையத்தளத்தினை அங்குரார்பணம் செய்து ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.எம்.முஸாரப், ஹஜ் மற்றும் உம்ரா குழுத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களும், வகுப் சபை உறுப்பினர்கள், ஹிந்து, கிறிஸ்தவ சமய திணைக்கள உத்தியோகத்தர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட இந்த இணையத்தளத்தை முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசலின் முயற்சியினால் உருவாக்க முடிந்ததுடன் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹமட், என். நிலூபர், கணக்காளர் நிப்றாஸ் ஆகியோரும் இதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டதாக கூறப்படுகிறது.
இணையத்தளத்தின் பயன்கள்
இந்தப் புதிய இணையதளத்தின் மூலமாக பள்ளிவாசல்கள் , ஸியாரங்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்கள், அஹதிய்யா பாடசாலைகள் ஹஜ், உம்ரா, வீசா சம்பந்தமான தகவல்கள் மற்றும் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களத்தையும் கணினி மயப்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டும் என்ற விதுர விக்ரம நாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்புதிய இணையதளத்தைப் பார்வையிட www.muslimaffairs.gov.lk இந்த இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.
இலங்கை முஸ்லிம்களின் பேச்சு மொழி
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தங்களின் பேச்சு மொழியாக தமிழை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளத்தில் தகவல்களை மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இணையத்தள பயன்பாட்டினை விரும்பிய மொழிக்கு இலகுவாக மாற்றிக்கொள்ளும் வசதி இல்லாமை கவலைக்குரிய விடயமாகும்.
கோப்புக்களாக கிடைக்கும் தகவல்கள் அதிகமாக ஆங்கிலத்தில் கிடைக்கின்றது. பல்கலைக்கழக கல்வி கூட தாய் மொழிக்கு மாறிக்கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில், மும்மொழிகளிலும் இதனை பெற முடியாத நிலை கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கை அரசின் இணையத்தளங்களில் மும்மொழிகளிலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தள மேம்பாட்டில் மும்மொழிகளிலும் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை உருவாக்குதல் வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அரசியல் இலாபங்களுக்காகவே முஸ்லிம்கள் என பிரித்து கையாள்வதாக எடுத்துரைக்கும் அரசியல் ஆர்வலர் ஒருவர் இலங்கையில் மொழிவாரியாகவே மக்கள் பிரிக்கப்பட்டு கையாளப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
கலாச்சார அடிப்படையில் இல்லை.பல்லின கலாச்சார மக்கள் வாழும் போதும் தமிழும் சிங்களமும் பிரதேச மொழிகளாக இருக்கின்ற வேளை ஆங்கிலம் பொது மொழியாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதும் இங்கே நோக்கத்தக்கது.
மத விழுமியங்கள் என்பது குறித்த மக்கள் கூட்டத்திற்குரியதாயினும் மனித சமூகத்திற்கு பயன்படக்கூடிய மதக்கருத்துக்கள் இருக்கும் போது அவற்றை ஏனையோரும் பெற்றுக்கொள்ள அவை அவர்களின் மொழியில் பெற்றுக்கொள்ளச் செய்வதே சாலச் சிறந்ததாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |