ட்ரம்பின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மஸ்க்!
அமெரிக்க அரச நிர்வாகத்துக்குள் தீவிரமாக ஆட்குறைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பில்லியனர் ஆலோசகரான எலான் மஸ்க், இன்று நடைபெறும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்க், ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அரச அதிகாரிகளுக்கு இடையேயான இழுபறிக்கு மத்தியில் இந்த முதல் அமைச்சரவை சந்திப்பு நடைபெறுகிறது, மஸ்க்குக்கு வழங்கப்படுள்ள அதிகாரத்தின் மீதான ஆரம்ப சோதனையாக இந்த இழுபறி மாறியுள்ளது.
அனைத்து கூட்டாட்சி ஊழியர்களும் தங்கள் சாதனைகளை விபரிக்க வேண்டும் அல்லது வேலை இழக்க நேரிடும் என்ற மஸ்க்கினால் மின்னஞ்சல் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் அவரது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கூறியுள்ளன. ஏனைய நிறுவனங்கள் அதை புறக்கணிக்கலாம் என்றும் கூறியதை அடுத்தே தற்போதைய குழப்ப நிலை தோன்றியுள்ளது.
கூட்டாட்சி அதிகாரத்துவத்துவம்
இதற்கிடையில், கூட்டாட்சி அதிகாரத்துவத்தை மேற்பார்வையிடும் நிறுவனமான அமெரிக்க பணியாளர் முகாமைத்துவ அலுவலகம், மஸ்க்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தொழிலாளர்களிடம் கூறிய பிறகும், ட்ரம்ப், மஸ்க்கின் விருப்பங்களுக்கு இணங்கினால் பணியாளர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று பரிந்துரைத்ததாகத் தெரிய வந்துள்ளது.
கூட்டாட்சி ஊழியர்கள் வாரத்தில், தாம் செய்த ஐந்து விடயங்களை பட்டியலிட வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும், கடந்த சனிக்கிழமை உத்தரவிட்ட மஸ்க், மின்னஞ்சல் மூலம் பதிலளிக்க 48 மணிநேர காலக்கெடுவை விதித்திருந்தார். நேற்று செவ்வாயன்று, மஸ்க் சமூக ஊடகங்களின் ஊடாக, பணியாளர்கள் பதிலளிக்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், மஸ்க்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என நினைக்கிறேன்" என்று ட்ரம்ப்பும் வலியுறுத்தியிருந்தார்.
ட்ரம்ப் விசுவாசிகள்
சிறு வணிக நிர்வாகத்தின் தலைவரான கெல்லி லோஃப்லர் போன்ற சில அமைச்சரவை அதிகாரிகள் மஸ்க்கின் கோரிக்கையை ஆதரித்தனர். ஆனால் புதிய FBI தலைவர் காஷ் படேல் போன்ற ட்ரம்ப் விசுவாசிகள் உட்பட மற்றவர்கள் தங்கள் ஊழியர்களிடம், மஸ்க்கின் மின்னஞ்சலுக்கு பதிலளிப்பதை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர்.
முன்னும் பின்னுமாக நடந்த இந்த சம்பவங்களின் பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை என்று அழைக்கப்படும் துறையிலிருந்து 21 பணியாளர்கள் பதவி விலகினர்.
இதேவேளை, மஸ்க்கின் ஆட்குறைப்பு முயற்சி 20,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது, அத்துடன், சுமார் 7,000 தகுதிகாண் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை மற்றும் இந்திய விவகார பணியகம் போன்ற பணியகங்கள் 10வீதம் முதல் 40வீதம் வரை தங்கள் பணியாளர்களைக் குறைப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்று உள்துறைத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், திறைசேரி, கல்வித் துறை மற்றும் பணியாளர் முகாமை அலுவலகத்தில் உள்ள முக்கியமான அமைப்புகளின் தரவுகளை அணுகுவதைத் தடுக்கவும், வெளிநாட்டு உதவி நிதிகளை வெளியிட உத்தரவிடவும் தலையிட்ட கூட்டாட்சி நீதிபதிகளுக்கு எதிராகவும், மஸ்க் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் மக்கள் ஆட்சியை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வதே" என்று மஸ்க், தமது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார். நீதிபதிகள் உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |