தினேஷ் ஷாப்டரின் கொலையில் பல மர்மங்கள்-நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை
ஜனசக்தி கூட்டு நிறுவனத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவமானது இன்னும் மிகப் பெரிய மர்மமாக இருப்பதாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
பல கோணங்களில் விசாரணை-சந்தேக நபர்கள் எவரும் பிடிப்படவில்லை
இது சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் உட்பட சில பொலிஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றன. எனினும் நேற்றைய தினம் வரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
தினேஷ் ஷாப்டரின் கொலை சாதாரணமான கொலையாக தெரிந்தாலும் அது திட்டமிட்ட குழுவொன்றினால், மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷாப்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் எவ்வித தடயங்களை விட்டு செல்லாது மிகவும் திட்டமிட்டு கொலையை செய்துள்ளனர் என விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொலையாளிகளுக்கு தினேஷ் ஷாப்டருக்கு வதை கொடுத்து மரண அச்சத்தை ஏற்படுத்தும் தேவை இருந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யும் தேவை இருக்குமாயின் அதனை செய்யக்கூடிய இலகுவான பல வழிகள் இருக்கின்றன. எனினும் இந்த கொலையானது திட்டமிடப்பட்டு மிக துள்ளியமாக முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை தினேஷ் ஷாப்டரின் தொலைபேசிக்கு வந்த சந்தேகத்திற்குரிய நான்கு அழைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அந்த தொலைபேசி இலக்கங்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள பொரள்ளை பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
கொலை தொடர்பாக நேற்றைய தினம் வரை தினேஷ் ஷாப்டரின் மனைவி உட்பட 50 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனத்தை மயானத்திற்கு செல்லும் வழியில் சிற்றூண்டிகளை கொள்வனவு செய்த தினேஷ்
மேலும் தினேஷ் ஷாப்டர் வீட்டில் இருந்து புறப்பட்டு பொரள்ளை கனத்தை மயானம் வரை செல்லும் வழியில் இடையில் குணபால மலலசேகர மாவத்தையில் உள்ள உணவகம் ஒன்றில் இரண்டு சிற்றூண்டி பொதிகளை கொள்வனவு செய்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த உணவு பொதிகள் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த காரில் அப்படிய இருந்துள்ளன. இவ்விதமாக இந்த கொலை சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய பல சம்பவங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.