காரியாலய உதவியாளரை தாக்கிய மாநகரசபை ஆணையாளர்: மட்டக்களப்பில் சம்பவம்
விடுமுறையில் இருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாநகரசபையில், காரியாலய உதவியாளராக கடமையாற்றி வரும் ஜனார்த்தன் என்பவர் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாநகரசபை ஆணையாளர் காரியாலயத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.
காரியாலயத்தில் ஆணையாளர் தலைமையில் ஒரு திட்டமிடல் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற காரியாலய உதவியாளரிடம் ”நீ என்ன மக்களிடம் பணம் வாங்குகிறாயா” என ஆணையாளர் கேட்டுள்ளார். அதன்போது அவர் ”நான் அப்படி வாங்கவில்லை. நான் வாங்கியதை நிரூபிக்குமாறு” கேட்டுள்ளார்.
இதனையடுத்து காரியால உதவியாளரின் மீது ஆணையாளர் தாக்கி அவர் அணிந்திருந்த டீ- சர்ட்டை கிழித்துள்ளார். இதனால் காயமடைந்த உதவியாளர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை மாநகரசபை ஆணையாளர் தன்னை காரியாலய உதவியாளர் தாக்கியதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
