மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்
மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளியாக கருதப்படும், தஹாவூர் ராணா இன்று(10) அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரை அழைத்து வந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது, இதனையடுத்து தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ அதிகாரிகள், ராணாவை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அமெரிக்காவில் கைது
2008 ஆம் ஆண்டு 175 பேரை பலி கொண்ட மகாராஸ்டிர மாநிலம் மும்பை மாநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், தஹாவூர் ராணை இந்தியாவிடம் ஒப்படைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்ப்பிடமும் இது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா நீதிமன்ற உத்தரவுப்படி ராணா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார் இதனை மையப்படுத்தி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ராணாவை விசாரணை செய்யும் போது, மும்பை தாக்குதல் சதித் திட்டத்தை தீட்டியது யார்? லஸ்கர் இ தைய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு எப்படி உதவி செய்தது?
மும்பை தாக்குதல் சம்பவத்தில் இன்னமும் பிடிபடாதவர்கள் யார்? என்பது குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |