வெளிநாடொன்றில் கவனிக்கப்படாமல் அரங்கேறிய பல மில்லியன் யூரோ கொள்ளை
ஜேர்மனியின் கெல்சென்கிர்ச்சென் (Gelsenkirchen) நகரில் உள்ள ஸ்பார்கசி (Sparkasse) வங்கியில், கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி ஹொலிவூட் பட பாணியில் ஒரு பிரம்மாண்ட கொள்ளை அரங்கேறியுள்ளது.
வங்கியின் பக்கவாட்டில் உள்ள வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஊடுருவிய கொள்ளையர்கள், ராட்சத துளையிடும் இயந்திரத்தைக் கொண்டு வங்கியின் தடிமனான சுவரில் 40 செ.மீ அகலத்திற்குத் துளையிட்டுள்ளனர்.
தீயணைப்பு எச்சரிக்கை மணி ஒலித்தபோதிலும்
டிசம்பர் 27 முதல் 29 வரையிலான காலப்பகுதியில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவத்தில், பாதுகாப்பு அறையில் இருந்த 3,250 பாதுகாப்பு பெட்டிக்குள் பெரும்பாலானவற்றை உடைத்து, அதிலிருந்த தங்கம், வைரம் மற்றும் ரொக்கப் பணத்தைச் சுருட்டியுள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.900 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளையின்போது வங்கியின் தீயணைப்பு எச்சரிக்கை மணி ஒலித்தபோதிலும், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெளிப்புறத்தில் சேதங்கள் ஏதும் தெரியாததால் அது தவறான எச்சரிக்கை என திரும்பிச் சென்றுள்ளனர்.
இதனைச் சாதகமாக்கிக் கொண்ட கொள்ளையர்கள், ஆதாரங்களை அழிப்பதற்காக லாக்கர் அறை முழுவதும் இரசாயனங்கள் மற்றும் தண்ணீரை ஊற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தங்களின் வாழ்நாள் சேமிப்பையும், பரம்பரை நகைகளையும் இழந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு பெட்டகத்துக்கு வெறும் 10,300 யூரோக்கள் மட்டுமே காப்பீடு வழங்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர். தற்போது கண்காணிப்பு கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.