இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலை: கோவிந்தன் கருணாகரம்
இலங்கையில் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (18.05.2024) இடம்பெற்றிருந்தன.
இதன்போது கருத்து தெரிவித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மே 18
மேலும் தெரிவிக்கையில், மே 18 என்பது இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு துயரமான, சோகமான, துக்கரமான நாளாகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கையில் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்பட்டு வந்ததன் காரணமாகவே தமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் வலிந்து தள்ளப்பட வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் உள்வாங்கப்பட்டோம்.
அந்த வகையில் தான் எமது இனம் தமது உரிமையினை பெறுவதற்காக நீண்ட காலமாக அகிம்சை, ஆயத ரீதியாக போராடிக் கொண்டு வந்தோம்.
உரிமைகளை பெற பாடுபட வேண்டும்
இலங்கையில் மாறி மாறி ஆண்டு வந்த அரசுகள் தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள், தமிழ் மக்கள் தான் இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்ற எண்ணத்தை மாற்றி இதுவொரு சிங்கள தேசம், இது ஒரு பௌத்த நாடு, பௌத்தர்களுக்குதான் முன்னுரிமை என்ற அடிப்படையிலே நடத்திவந்தார்கள்.
இன்று தனது உறுப்பினர்களை, தங்களது ஆதரவாளர்களை பட்டலந்த வதைமுகாம் மூலமாக கொன்றொழித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் இந்த அரசாங்கம், வடக்கு - கிழக்கில் தமது உரிமைகளை கேட்டு போராடியவர்களுக்கோ படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவோ எந்த நியாயத்தினையும் கொடுக்ககூடிய நிலையில் இல்லை.
தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக பயணித்து எங்களுக்காக உயிர்நீர்த்த அத்தனை உறவுகளின் ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டுமானால் அரசியல் ரீதியாக என்றாலும் ஏனைய விடயங்கள் என்றாலும் ஒன்றாக பயணித்து எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் பாடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
