15 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத தமிழர்கள் : பிரித்தானிய தமிழர் பேரவை
15 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, குற்றங்கள் இன்று வரை தொடர்கின்றது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதனால் உயிர் பிழைத்தோருக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் மன உளைச்சலை கொடுக்கின்றது. இவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் தாயகம், அரச பயங்கரவாத பாதுகாப்பு படையினரால் கொடூர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
உண்மை கண்டறியப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஐந்து வருடங்களுக்கு முன் ஐ.நா.மனித உரிமை கழகத்தில் நாம் ஆவணப் படம் ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.
2009இல் இடம்பெற்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு பொறுப்பு கூறல், மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டல் என்ற அடிப்படைகளைக் கொண்ட நிலையான அமைதிக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறியிருந்தோம்.
2009 இல் நடந்த குற்றங்கள் போன்று இப்போது காசாவிலும் நடைபெறுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றோம். மனித உரிமைகளில் அக்கறை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் "மீண்டும் ஒருமுறை வேண்டாம்" (Never again), நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.