கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலய காணி அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்(Video)
உருத்திரபுரம் சிவாலயத்தின் அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சியின் மிகவும் பழமை உருத்திராபுரீஸ்வரர் ஆலயத்தின் காணியினை இன்றைய தினம்(18-05-2023) அளவீடு செய்வதற்காக கரைச்சி பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஆலய நிர்வாகத்தினர் இன்று (18.05.2023) ஆலய வளாகத்தில் ஒன்று கூடியதால் தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகள் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி: யது
முதலாம் இணைப்பு
தொல்லியல் திணைக்களமானது, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குறிவைத்து கிளிநொச்சி உருத்திரபுரேஸ்வரர் ஆலயத்தின் காணி அளவீட்டை மேற்கொள்கின்றது என சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி உருத்திரபுரேஸ்வரர் ஆலயத்தில் இன்று (18.05.2023) தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.
இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம். எமது உறவுகள் உயிர் நீத்த தினமாகும்.
சட்டவிரோத செயல்
இன்றைய நாளில் நாம் அனைவரும் அவர்களை நினைவு கூறுவதற்காக முள்ளிவாய்க்காலில் நிற்க வேண்டும்.
ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் அடாத்தான, மிலேச்சத்தனமான செயற்பாடுகளால் நாம் இன்று கிளிநொச்சி உருத்திரபுரேஸ்வத்தில் நிற்கின்றோம்.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களமானது தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் வகையிலும், தமிழ் மக்களோடு நிரந்தர பகைமையை ஏற்படுத்தும் வகையிலும் செயற்படுகின்றது.
நீங்கள் செய்வது சட்டவிரோத செயல். நீங்கள் செய்வது புத்தருக்கும் பொறுக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.