கிளிநொச்சி உருத்திரபுரத்திலிருந்து தொல்லியல் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி
உருத்திரபுரீஸ்வரர் ஆலய காணி அளவீட்டுக்காக மே மாதம் 18ஆம் திகதியை குறித்திருப்பதானது தொல்லியல் திணைக்களத்தின் மிலேச்சத்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பொன்று இன்று (15.05.2023) கிளிநொச்சி - உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மே 18இல் அளவீட்டு பணி
மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளுக்காக வருகை தர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
இது எந்தவொரு வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படவோ அல்லது அனுமதிக்கப்படவோ முடியாத ஒரு விடயம். இலங்கையில் தற்பொழுது இருக்கின்ற ஏழு ஈச்சரங்களில் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரீச்சரம். இது வரலாற்று காலம் தொட்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட நாகர் காலத்திலிருந்து தமிழ் மக்களாலும், சைவ மக்களாலும் வழிபட்டு வரப்பட்ட புனிதமான பிரதேசம்.
இந்த புனிதமான சைவ ஆலயச் சூழலில் தொல்லியல் திணைக்களம் அளவீட்டு பணிகளுக்காக வருவதாக அறிவித்திருப்பது என்பது தமிழ் மக்களை பொறுத்த வரையில் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
தமிழ் மக்களுடைய இனத்துவ அடையாளங்களை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு ரீதியில் தொடர்ந்து அழித்து வருகின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் அதனுடைய இன்னுமொரு பரிணாமமாக கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் கை வைப்பதாக நாங்கள் உணருகின்றோம்.
தொல்லியல் திணைக்களத்திற்கான செய்தி
இந்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்திற்கு நாங்கள் ஒரு செய்தியை விடுக்கின்றோம். தயவு செய்து நீங்கள் தொல்லியல் திணைக்களமாக மாத்திரம் செயற்படுங்கள். பௌத்த ஆக்கிரமிப்பு சின்னமாக மாறாதீர்கள். இது தமிழ் மக்களுடைய வழிபாட்டுத்தளம்.
சோழர் காலத்திற்கு முன்பிருந்து நாகர் காலத்திலிருந்து நாங்கள் உருத்திரபுரீச்சரரை வழிபட்டு வருகின்றோம்.
ஆகவே, தொல்லியல் திணைக்களம் தமது செயற்பாட்டை உடனடியாக கைவிட வே்ணடும் என குறிப்பிட்டுள்ளார்.