இனப்படுகொலைக்கு குறியீடான முள்ளிவாய்க்கால் படுகொலை
இன்றைய 21ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கெதிரான மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்தது. தமிழ் மக்களின் கடந்த ஒரு நூற்றாண்டு கால அரசியற் தோல்விகளின் விளைவுகள் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஈழத் தமிழினத்தை 2009 மே 18ல் முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
இரத்தம் தோய்ந்த வகையிலான இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சக் கட்டத்தை தொட்டது. ஆயுதப் போராட்டம் எதனை எம்மிடம் இறுதியாகத் தந்திருக்கிறதோ அதனை வைத்துக்கொண்டுதான் அடுத்தகட்ட வரலாற்றுப் பயணத்தை எம்மால் தொடர முடியும்.எங்கு நாம் நிறுத்தப்பட்டோமோ அங்கிருந்துதான் அடுத்தகட்ட போராட்டப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
நவீன உலகின் இனவெறியர்கள்
மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொரு வகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர் வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது.
மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர். நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல லட்சம் யூதர்களை சாம்பலாக்கியது. இந்த வரிசையில் ஆர்மேனியா, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருக்கிறன.
முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலையின் குறியீடு. பாலையும், நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் தேசத்தின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் விடுதலை தாகத்திற்கு தக்கசான்று.
அந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும், பிஞ்சும், காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமிழரினதும் நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். நெஞ்சம் கனக்கும்.உயிர் பெற்று எம்மை வழிநடத்தும்.
இத்தனை தகுதிகளும் அந்த முள்ளிகாய்க்காலுக்கு எப்படி வந்தது?. முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் கொடுமைகள் நஞ்சுமாலைகள் களத்திலே வீழ்ந்ததாம். அஞ்சிடாதார் உடல்கள் அங்கே அழிந்துபோனதாம். குஞ்சுகுருமன்களும் குண்டுபட்டுச் சிதைந்து போனதாம்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டு வரலாற்றின் பின் போர்க்களத்தில் தமிழினம் ஆடிய வெஞ்சமரது. அந்த முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் கொடுமையை அப்பெருந் துன்பத்தை எப்படிச் சுமப்போம். மானிடம் பேசும் உலகிற்கு எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே! அன்று உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள்.
குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச் சிகிச்சையின்றி மடிந்தார்கள். உலகின் சோசலிச, முதலாளித்துவ, இரசாயனக் குண்டுகளுக்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே. இப்பெருங் கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை, பார்க்கவில்லை.
அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. முள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறன.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக புலிவீரர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.
நாற்புறமும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயுத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய தமிழின வீரர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்ததைத்தான் எப்படி மறப்போம்.
தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா? அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீரர்கள் செய்த அளப்பரிய தியாகங்களைத்தான் மறந்திட முடியுமா? தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக, எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் நான்கரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்பது?
சிங்கள பேரினவாதங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக 2009 மே திங்கள் 16 - 17ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்ததுண்டா? அந்தக் கொலைகாரக் ஹிட்லர் கூட கொன்றதன் பின்தான் யூதர்களைப் புதைத்தான், எரித்தான்.
ஆனால் முள்ளிவாய்க்காலில் சிங்களமோ உயிருடனல்லவா எம்மினத்தைப் புதைத்தது. ஒன்றா, இரண்டா இரண்டு நாளில் 140.000 மேற்பட்ட ஈழத்தமிழர் முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்களப் பேரினவாதம்.
தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்தது தெரியாமல் இருந்தாள். ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்தது தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்ததையிட்டுத் துடித்தாள் ஒரு தாய் கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டுபட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்ததுண்டா?
மிருகத்தனமான ஈனச் செயல்கள்
உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிகக் கீழ்த்தரமான , மிருகத்தனமான ஈனச் செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்ததல்லவா.
அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படைவீரர்களையும், பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தின் கொடுமையை யாரும் அறிந்ததுண்டா?வயது வந்த மகனும் தாயும், வயது வந்த மகளும் தந்தையும், வயது வந்த அண்ணனும் தங்கையும், வயது வந்த மச்சானும் மச்சாளும், வயது வந்த அயலவனும் அயலவளும், அதிகாரியும் பணியாளரும், மருத்துவரும் தாதியும் நிர்வாணமாய் இராணுவத்திடம் சரண் அடையும் துர்ப்பாக்கிய நிலையை எம்மனித மொழிகளில் சொல்லிட முடியும்.
இன்னும் எத்தனை! எத்தனை!! கொடுமைகள்!!! உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறின.
மக்கள் படுகொலை
வன்னிமண்ணில் மக்களின் மீது வகைதொகையின்றி அனைத்துவகை
குண்டுகளையும் வீசி மக்களைப் படுகொலை செய்து இடம்பெயரச்
செய்து மக்கள் என்ற பெருஞ் சுமையை விடுதலைப்புலிகளை சுமக்கச்
செய்ததன் மூலம் விடுதலைப் புலிகளை நகர முடியாமல் முடக்கிய
நிலையில் இனப்படுகொலை செய்ததன் வாயிலாக விடுதலைப் புலிகளின்
போரிடும் வலு உடைக்கப்பட்டு தமிழீழ நிழல் அரசு வீழ்த்தப்பட்டது.
இந்த சிங்களத்தின் வெற்றியானது வீரத்தின் வெற்றியல்ல கோழைத்தனமான இனப்படுகொலை வெற்றியே. முள்ளிவாய்க்கால் தோல்வி என்பது தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல.
உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்குமுறையாளர் நிம்மதியாக ஓய்வெடுத்ததான வரலாறும் எங்கேனும் இல்லையே? சாத்வீக போராளிகள், ஆயுதப் போராளிகள், எந்த மிதவாத கட்சியை சேர்ந்தவர்களாயினும் சரி, எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் சரி, இறுதி அர்த்தத்தில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் எதிரிகளிடம் சரணடைந்து இறுதியில் இன்று மக்கள் அனைவருமே எதிரியின் காலடிகளில் விழ்ந்துகிடக்கும் துர்ப்பாக்கியமே ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையாய்க் காணப்படுகின்றது.
இன்று எதிர்புரட்சியாளரை மட்டுமே கொண்டுள்ள ஈழத்தமிழினம் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தம்மை முன்னோக்கி நகர்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அத்தகைய அதிக விலை கொடுத்து முன்னேறுவதற்கு காலமும், எதிரியும் நமக்கு இடந்தரப் போவதில்லை என்பதை தமிழினம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
தலைமைத்துவப் பண்பு தமிழினம் தன்னுள்ளே தேசிய நிர்மானிப்புக்களை கட்டித் தகவமைத்து சர்வதேச உறவுகளுக்குள் தன்னை வளப்படுத்தி இப்புவிசார், பூகோள அரசியலில் ஸ்தாபிதம் செய்வதற்கு இலட்சியமும், திடசிற்பமும் வாய்ந்த உறுதியான தலைமை ஒன்று தமிழர்களுக்கு தேவைப்படுகிறது. இத்தகைய தலைமைத்துவப் பண்புடைய யாரையும் தமிழர் தரப்பில் தற்போது காணமுடியவில்லை.
இலங்கை அரசியல் போக்கு
ஒரு நூற்றாண்டுகால இலங்கை அரசியல் போக்கும் இந்துமா சமுத்திர
பிராந்திய அரசியல் பொருளியல் போக்கும் உலகளாவிய
அரசியலொழுங்கிலும் தமிழர் தாயகம் தவிர்க்கமுடியாத
கேந்திரப்புள்ளியாய் அமைந்து கிடக்கையில் இதன் காத்திரமான
பெறுமதியை உணர்ந்திராத தமிழ்த் தலைமைகள் தம்மனம் போன
போக்கில் செயற்பட்டு தன்னின உண்ணிகளாக விகாரமடைந்து
காணப்படுகின்றனர்.
சிங்களத் தலைவர்களுக்கு சாத்தானிடம் புத்திகேட்டு அந்தப் புத்தியின் எதிர்த்திசையில் பயணித்து தம்மிலக்கை அடையும் வல்லமையுண்டு. ஒன்றின் உட்பொருளைக் காணவும், அதுசார்ந்து தத்துவார்த்த விசாரணை செய்யவும் கூடிய அளவிற்கு அவர்களுக்கு நுண்மான் நுழைபுலமுண்டு.
ஆனால் தமிழ் கட்டாக்காலித் தலைவர்களோ இவை எதுவுமறியாது உள்ளனர். இவர்கள் அறிவார்ந்த அரசறிவியல் மாற்றத்திற்கு உட்படுத்தபட வேண்டியவர்களாவர்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் ஈழத்தமிழர்களுக்கு பேரழிவையும், பெருவலியையும் தந்தது. ஆனால் அது தமிழர் அரசியலுக்கு இனப்படுகொலை என்ற ஒரு வரத்தையையும் தந்தது. அந்த வரத்தைக் கொண்டு சர்வதேச அரசியலில் முதலீடாக்கி எங்கள் தேசத்தை நிர்மானித்திருக்க முடியும்.
ஆனால் அந்த வரத்தை தன்னின உண்ணிகளான கூட்டமைப்பு சிங்களப் பேரினவாதத்திடமே விற்றுத் தங்கள் பணப் பெட்டிகளை நிரப்பிக்கொண்டுவிட்டது. அரசியல் என்பது ஒரு விஞ்ஞானம். எனவே அதனை எழுந்தமானதாகவோ மனவிருப்பின்பாலோ அணுகமுடியாது.
அரசியலானது பொருளாதாரம் பற்றிய ஒரு விஞ்ஞானமுமாகும் அத்தோடு அரசியலானது சமூகவியலில் சாத்தியக்கூறுகள் பற்றிய கலையுமாகும். இத்தகைய அரசியலை கையாளும் தலைமைத்துவம் என்பது வேற்றுமையில் ஒற்றுமையை கண்டறிந்து உருவங் கொடுக்கும் பணியாகும்.
ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் எனப்படுவோர் ஒற்றுமையில் வேற்றுமையைக் கண்டு வேற்றுமையைப் பெரிதாக்கி சாத்தியக்கூறுகளைச் சதிக்கூடாரங்களாக்கி அரசியல் விஞ்ஞானத்தை பணம்பண்ணும் வியாபாரமாக்கி ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைகளை ஏலங்கூறி விற்றுக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்த்தேசிய நலன்களை சர்வதேச, பிராந்திய, உலகளாவிய கண்ணோட்டங்களுடன் இணைத்து தோல்வியில் வீழ்ந்து துயருற்றிருக்கும் மக்களின் விமோசனத்திற்காக இதயசுத்தியுடன் சிந்திக்க வேண்டியது அவசியம்.
இத்தகைய சிந்தனையார்வம் கொண்டோரும், சமூகப்பற்றுக் கொண்டோரும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறார்கள். அத்தகையவர்களை ஒன்றுகூட்டி ஒரு சிறு அணியாக்கினாலே ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறமுடியும். இத்தகையவர்கள் முன்வருவதற்கு மிகப்பெரிய தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பது இன்றைய சுயநல அரசியல்வாதிகளே.
தொன்மையான பண்பாட்டு மேன்மை
பாரசீகப் பெரும்படையின் காலடியில் கிரேக்கம் விழுந்து ஒரு மாதம் ஆவதற்குள் அதுவும் இற்றைக்கு 2500 ஆண்டு காலத்துக்கு முற்பட்ட சூழலில் 100 க்கு மேற்பட்ட நகர அரசுகளை ஒன்று திரட்டவும் ஒரு லட்சம் வரையிலான படையினரை திரட்டி அவற்றை கட்டமைக்கவும் முடிந்ததை பார்க்கும் போது தமிழினம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பு பதின்நான்கு ஆண்டுகளாகியும், இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பலம் பொருந்திய ஒரு சிறப்பான மாற்றுத் தலைமையை உருவாக்கக்கூடிய ஆற்றலின்றி தமிழ் தேசிய இனம் காணப்படுவது அதன் தொன்மையான பண்பாட்டு மேன்மைக்கும் அதன் தேசிய கௌரவத்திற்கும் இழைக்கப்படும் பெரும் வரலாற்று இழுக்காகும்.
கற்பனைகளை கைவிட்டு, மனோரம்யக் கனவுகளை களைந்து, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக அறிவுபூர்வமா தமிழீழப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன், புதிய சூழலுக்கேற்ப ஒரு புதிய பாதையில் முன்னெடுக்கவல்ல ஆற்றலையும், செயற்திறனையும் ஒன்றுபட்ட வகையிலும், உலக நாகரிகத்திற்கு பங்களிப்பு செய்யவல்ல ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், முழு உலகம் தழுவிய பூகோளக் கண்ணோட்டத்துடனும் மனிதகுல நாகரிகம் தழுவிய பரந்த கண்ணோட்டத்துடனும், நடைமுறைக்குப் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையினை புத்தி பூர்வமாய் வடிவமைத்து, புதிய தமிழ்த் தேசியவாதத்தை கட்டமைப்பு செய்து தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் மண்ணில் வீழ்ந்தவர்களீன் ஆன்மாக்கள் ஆணையிடுகிறன. உலகத் தமிழினமே விழித்திரு! வெறித்திரு!! தெளிந்திரு!!! நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.