பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்
வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (19.10.2023) மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20 இலட்சம் கப்பம் கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக குறித்த வர்த்தகர் முல்லேரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னர் சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை முல்லேரியா அங்கொட, தெல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய ஒருவரின் உத்தரவின் பேரில் குறித்த நபர் வர்த்தகரை அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அண்மைக்காலமாக இதுபோன்று பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறான அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.