முல்லைத்தீவில் கிராமிய வீதி ஒன்றின் முடிக்கப்படாத கட்டுமானத்தால் பாதிப்படையும் மக்கள்
முல்லைத்தீவில் கட்டுமானப்பணிகள் முடிக்கப்படாத கிராமிய வீதி ஒன்றினால் குறித்த பகுதியால் பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாரியளவிலான நெருக்கடிகளை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாண்டுகளை நெருங்கி வருகின்ற போதும் இதுவரை அப்பணிகள் முடிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மிக குறுகிய காலத்தில் முடிக்கபடக்கூடிய இந்த வேலை இரண்டாண்டுகளாக இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் உரிய அரச அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகின்றது.
திட்டமிட்ட கட்டுமானப்பணியாக இது இருந்த போதும் பணிகள் முடிக்கப்படாதது தொடர்பில் பிரதேச செயலகம் கண்டும் காணாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பாதையின் பகுதி
முல்லைத்தீவில் - குமுழமுனை, தண்ணீரூற்று வீதியையும் முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியையும் இணைக்கும் பிரதான இணைப்பு வீதியில் குறித்த கட்டுமானம் முடிக்கப்படாத இந்த பகுதி இருக்கின்றது.
இந்த வீதி முறிப்பு, கொத்தியகமம், உடுப்புக்குளம், ஊடாக செல்லும் பிரதான இணைப்பு வீதியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முறிப்பில் இருந்து முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியை சென்றடையும் பாதையின் தரைத்தோற்றம் நீர் சதுப்புள்ள நிலத்தினூடாக செல்கின்றது.
மாரி காலம் மட்டுமல்லாது கோடை காலத்தின் நீண்ட பகுதியில் ஊற்றெடுத்து ஓடும் நீரோட்டத்தினால் இந்த வீதியின் குறிப்பிட்ட பகுதிகளில் நீர்கசிவு வீதியை பயணிக்க முடியாதளவுக்கு சேறும் சகதியுமாக்கி விடுகின்றது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டம் கட்டமாக பலதடவைகள் இந்த வீதியில் உள்ள நீரோட்டத்தால் அதிகம் சேதமாகும் பல பகுதிகள் செப்பனிடப்பட்டு வந்துள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியிருந்தனர்.
அந்த தொடரொழுங்கிலேயே இந்த வீதியின் குறிப்பிட்ட சுட்டிக்காட்டும் பகுதியும் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.
முடிக்காத கட்டுமானம்
கடந்த ஆண்டு மாரி மழைக்கு முன்னர் முடிக்க வேண்டிய கட்டுமானப் பணிகள் தாமதமானதால் மாரிகால மழைக்கு முன்னர் பாதி வேலைகள் முடிக்கப்பட்டு இருந்தன.
வீதியின் மேலால் பாய்ந்தோடிய அதிக வெள்ளமும் வீதியின் நிலத்தில் தொடர்ந்து ஊறியோடும் ஊற்று நீரோட்டமும் பாதி முடிக்கப்பட்ட வேலைகளில் பெரும் பகுதியை சேதமாக்கி இருந்தன.
மீண்டும் அவை திருத்தி திருப்பி அமைக்கப்பட்டுள்ள போதும் மீதமுள்ள வேலைகள் முடிக்கப்படாது இருக்கின்றன.
வீதியில் ஓரமாக அமைக்கப்படும் வாய்க்கால் வழி பாய்ந்தோட வேண்டிய வெள்ள நீர் வீதியின் மேலாக பாய்ந்து செல்லும் நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
வெள்ள நீர் வழிந்தோடும் வகையில் வடிகால்கள் செப்பணிடப்படவில்லை. அத்தோடு வீதியின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள சீமெந்து கட்டுக்கள் மண்ணால் மூடப்படாத நிலையில் விடப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.
வீதியின் மேற்பகுதியில் உள்ள நிலம் அழுத்தமாக்கப்படாது குண்டும் குழியுமாக இருந்து வருவதோடு மணலாகவும் ஒரு பகுதி இருந்து வருகின்றது.
மொத்த வீதியும் திருத்தி அமைக்கப்பட்ட வேண்டிய ஒரு தேவை இருந்த போதும் வெள்ளத்தினால் சேதமடையும் வீதியின் பகுதியை சேதத்தில் இருந்து தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த கட்டுமானம் முழுமைப்படுத்தப்படாத நிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.
பாதிக்கப்படும் மக்கள்
பயணங்களை இலகுவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டுமானங்களை உரிய காலங்களில் முடிக்காது போகும் போது அவற்றால் மேலும் பயணங்கள் அசௌகரியமாகும் நிலை ஏற்படுகின்றது.
திட்டங்கள் முன்மொழிந்து நடைமுறைப்படுத்த முனையும் போது அவை முடிக்கப்படுதல் தொடர்பில் தொடர் கண்காணிப்பும் நெறிப்படுத்தலும் அவசியமான போதும் அவை சரிவர முன்னெடுக்கப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒன்றுக்கு இரண்டு தடவை முன்னெடுக்கப்பட்டும் முழுமைப்படுத்தப்பட முடியாதளவுக்கு ஒரு வீதிக் கட்டுமானம் இருப்பது தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு வெளிப்பட்டு நிற்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
முறிப்பு, கொத்தியகமம், உடுப்புக்குளம், அளம்பில், குமுழமுனை ஆகிய கிராம மக்கள் உள்ளிட்ட அக்கிராமங்களினை அடுத்துள்ள கிராமங்களின் மக்களும் இந்த பாதையினை பயன்படுத்தி வரும் ஒரு சூழலில் அதன் அபிவிருத்தி இழுத்தடிக்கப்பட்டுச் செல்வது தொடர்பில் பொதுமக்கள் பலராலும் அதிருப்தியும் விசனமும் வெளியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |