இனவாதத்தை பரப்பும் தமிழ்க் கட்சிகள்: மொட்டு எம்.பி. சீற்றம்
குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, "நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
முடிவு கட்டப்பட வேண்டும்
இப்பிரச்சினையைத் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது என அரசிடம் கூறியுள்ளோம். அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதனால் தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்குக் கூட அடையாள அட்டை இன்றி நகரப் பகுதிகளுக்கு வர முடிகின்றது.
போர்க் காலத்தில் அவ்வாறான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்குரிய சூழலை மகிந்த ராஜபக்சவே ஏற்படுத்திக்கொடுத்தார்.
தமிழ் சகோதரர்கள் அல்லர், தமிழ்க் கட்சிகளுக்கே இனவாதத்தைப் பரப்ப வேண்டிய தேவை உள்ளது. அதனால்தான் பிரச்சினைகளைத் தோளில் சுமக்கின்றனர். தெற்குக்கும் தவறான செய்தியை வழங்குகின்றனர்.
மேலும் , 13 தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டில் நாம் இல்லை. ஒரேயொரு நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கின்றோம். அதாவது 13ஐ வழங்குவதற்கு எமது கட்சி உடன்படாது. இந்த விடயத்தில் எமது கட்சியின் கொள்கை மாறாது. இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவும் தயாராகவுள்ளோம். யோசனைகளும் முன்வைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



