முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை: 7 பேர் சித்தி
முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்றிருந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி
குறித்த பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயின்ற வி.பிருத்திகா (168), சு.ருபிசன் (162), த.அனோஜ் (162), ப.பிருத்திகா (160) சி.ஆதித்தியா (159), சி.திசானி (159) சு.அஸ்வினி (152) ஆகிய ஏழு மாணவர்களே வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
தரம் 5 இல் 35 மாணவர்களை கொண்ட மு/குமுழமுனை மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்கு அத்தனை மாணவர்களும் தோற்றியிருந்ததோடு இவர்களில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளதோடு 100 புள்ளிக்கு மேல் 21 மாணவர்கள் புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
31 மாணவர்கள் சித்தியடைந்ததாகவும் 88.5 சதவீத சித்தியை பாடசாலை பெற்றுள்ளதாக பாடசாலை சமூகத்தினர் குறிப்பிடுகின்றனர்.
மாணவர்களை பயிற்றுவித்தோருக்கு பாராட்டு
தரம் 5 மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சைக்காக பயிற்றுவிப்பதில் ஆசிரியை வி.திருச்செல்வம் மற்றும் ஆசிரியை வி.ஜெயசீலன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
பாடசாலையின் பகுதித் தலைவராக கடமையாற்றும் ஆசிரியை சி.வெற்றிவேல் அவர்களின் நெறிப்படுத்தலில் மாணவர்களும் ஆசிரியைகளும் இணைந்து இயங்கியதால் வெற்றி நோக்கி பயணிக்க முடிந்ததாக பாடசாலைச் சமூகத்தினர் குறிப்பிட்டதோடு அவர்களுக்கு தங்கள் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |