இன்னும் சில நாட்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் மனித புதைகுழிகளை தோண்டும் பணிகள்
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளிப்பட்ட அண்மைய மனித புதைகுழிகளை தோண்டும் பணிகளை இன்னும் ஒருசில நாட்களில் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளை மீண்டும் தோண்டும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைகுழிகள் விவகாரத்துடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுக்கு, அரச புலனாய்வுத் துறையிடமிருந்து எழும் அச்சுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயம்
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும், ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளும் முன்னிலையாகி, ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
இதற்கமைய இந்த மாதம் 5ஆம் திகதி அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள், குழாய்களை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில், தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி புதைகுழியை அவதானிக்கச் சென்ற சட்டத்தரணிகளின் வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களைக் கேட்டு புலனாய்வு அதிகாரிகள் தம்மை அச்சுறுத்தியதாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வு நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக கடந்த மாதம் ஆகஸ்ட் 31ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், கலந்து கொண்ட சட்டத்தரணிகள் பலர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் தம்மையும் அச்சுறுத்தியதாக கிராம அதிகாரி கொக்குத்தொடுவாய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உண்மைகளை விளக்கி நீதிபதியிடம் விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கொக்குளாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரிய போது, நீதிபதி டி.பிரதீபன் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதலாவது அகழ்வு
ஜூன் 30ஆம் திகதி நீதவான் டி. சரவணராஜா ஜூலை 6ஆம் திகதி அந்த இடத்தில் அகழ்வுப் பணியை ஆரம்பிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஜூலை 6ஆம் திகதி, வெகுஜன புதைகுழிகளில் இருந்து உடல்கள் உத்தியோகபூர்வமாக தோண்டியெடுக்கப்பட்டபோது, குறைந்தது 10 மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அகழ்வாராய்ச்சியை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.செல்வரட்ணம் புதைகுழியை அகழ்வதற்கு தேவையான பணத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்குப் பதிலாக கணக்காளர் (நீதி நிர்வாகம்) முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு ஆகஸ்ட் 22ஆம் திகதி, “முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல் உறுப்புகள் தொடர்பான நீதவான் விசாரணைக்கான மதிப்பீடு" என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் 56 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“உங்களால் (மாவட்டச் செயலாளர்) விடுத்த கோரிக்கை மற்றும் குறித்த விசாரணைகள் தொடர்பாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள உத்தரவுக்கு அமைய, இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து ரூபா 5,663,480 என்னால் ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது”.
இந்த விசாரணையை விரைவாக நடத்துவதற்கு இந்த ஒதுக்கப்பட்ட தொகை வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி டி. பிரதீபனின் முன்முயற்சியின் கீழ் ஜூலை 13ஆம் திகதி நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் அகழ்வுப் பணிகள் தொடர்பிலான தீர்மானம் பல தடவைகள் தாமதமானது.
தொல்பொருள் திணைக்களம் மனித புதைகுழியின் இரண்டு வார விசாரணைக்காக தயாரிக்கப்பட்ட செலவு மதிப்பீட்டை ஆகஸ்ட் மாதம்17ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, மாகாண ஊடகவியலாளர்களின் கூற்றுக்கு அமைய அந்த தொகை 12 இலட்சம் ரூபாயாகும்.
கலந்துரையாடலில் பங்காற்றியவர்கள்
பாரிய புதைகுழி அகழ்வு தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, யாழ். வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியான செல்லையா பிரணவன், காணாமல் போனோர் அலுவலக சிரேஷ்ட சட்டத்தரணி ஜெனகநாதன் தட்பரன் மற்றும் எஸ்.துஷ்யந்தனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் (சி.எச்.ஆர்.டி) சார்பில் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மற்றும் சட்டத்தரணி வி.கே.தனஞ்சயன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேவேளை இந்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் கா.சண்முகதாசன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சமுத்திரஜீவ, முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா, கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
யுத்த காலத்தில் அரச படையினரிடம் சரணடைந்து கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வடக்கிலும் கிழக்கிலும் ஏறத்தாழ பதினைந்து வருடங்களாக தொடர்ச்சியக போராடும் தாய்மார் வெகுஜன புதைகுழி தொடர்பான விசாரணை மற்றும் அகழ்வுப் பணிகளின்போது சர்வதேச நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




