ஊடகவியலாளரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதை கண்டிக்கின்றேன்! பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்
உண்மை தன்மையினை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள் ராஜ் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு தொடர்பில் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றைய தினம் விசாரணைகளை முன்னெடுத்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கல் நிகழ்ந்த குரல்பதிவு
கரைதுறைப்பற்று தவிசாளர் தனது கட்சி உறுப்பினரோடு உரையாடிய அதாவது அரசியல் பழிவாங்கல் நிகழ்ந்த குரல் பதிவு ஒன்று பகிரங்கமாக வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த குரல் பதிவினை தவிசாளர் சபை உறுப்பினர்களை இழிவுபடுத்தும் நோக்கோடு 21 சபை உறுப்பினர்கள் உள்ள வாட்சப் குழுவில் பகிர்ந்திருந்தார்.

அந்த குரல் பதிவினை ஊடகவியலாளரிடம் வழங்கிய போது செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் உண்மை தன்மையினை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு போடப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
ஊடக தர்மம் என்பது உண்மை தன்மையை வெளியில் கொண்டுவருவது தான் ஊடகம். அதனை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளரை விசாரணைக்கு உட்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றேன். ஊடக தர்மத்தை இழிவுபடுத்துதல் இங்கு நடக்ககூடாது. எனவே இதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.