முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்தியாவின் உதவியுடன் நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தைக் கட்டவென தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் திட்டமுன்மொழிவை செயற்படுத்த தேவையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "எதிர்காலத்தில் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இந்திய உதவியுடன் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை நிருமாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம்.
அடுத்ததாக இந்த முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் நான்குமாடி மருத்துவ விடுதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கென முன்மொழியப்பட்ட நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்தை நிருமாணிப்பதற்கான உரிய மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் உரிய அறிக்கை 2024.06.23 அன்று Soil and Mineral Engineering (Pvt) Ltd நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள புரிந்துணர்வின் மூலம் கட்டப்பட்ட இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவேண்டும்.
இதற்காக வெளியுறவு அமைச்சின் ஒப்புதலையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் திணைக்கள ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டும். மேலும் அமைச்சரவை ஒப்புதலையும் பெறவேண்டும்.
இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு, முறையான பெறுகை நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகளைத் தொடங்கவுள்ளோம். நிச்சயமாக, அந்த மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.



