முல்லைத்தீவில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பிரதான பாலம் : குற்றச்சாட்டும் கடற்றொழிலாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பிரதான பாலம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியில் நாயாற்று நீரேரிக்கு குறுக்காக அமைந்துள்ள பாலம் தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.
நீண்ட காலமாக திருத்தங்களைச் சந்திக்காத பாலமாக இது இருக்கின்றது.துறைசார் அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ இது தொடர்பில் கவனமெடுக்காதிருக்கின்றனர் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
முல்லைத்தீவில் பல புதிய பாலங்களின் தேவைகள் இருப்பதனை இனம் காணும் அதே வேளையில் பயன்பாட்டில் உள்ள பல பாலங்கள் சேதமடைந்து செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது.
வேகத் தடை
நாயாற்றுப் பாலம் என மக்களால் அழைக்கப்படும் பாலமாக நாயாற்று கடல் நீரேரியின் மீது அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியின் பாலம் இருக்கின்றது.
முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியினை காபைற் வீதியாக புனரமைத்த போதும் இந்த பாலம் இரும்புப் பாலமாகவே இருந்தது.மாற்றி புதிய வலுவான பாலமாக அமைக்கப்பட்டவில்லை.
பாலத்தின் மீது பயணிக்கும் வாகனங்களின் வேகத்தினை வெகுவாக குறைக்கும் படி வேகத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய பிரதான பாலங்களையும் சிறிய பல பாலங்களையும் கொண்டமைந்த 100 மீற்றர் வரையான நீளம் கொண்ட பாலமாக நாயாற்றுப் பாலம் இருப்பதாக செம்மலையினை வசிப்பிடமாக கொண்ட புளியமுனை விவசாயி ஒருவர் நாயாற்றுப் பாலம் தொடர்பில் விளக்கியிருந்தார்.
இரண்டு பிராதன பாலங்களும் அளவில் பெரியதாகவும் இரும்புப் பாலங்களாகவும் உள்ளன.அவற்றின் மீது செல்லும் வாகனங்களின் வேகத்தினை குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை யானது நிரந்தரமானதாக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
துருப்பிடித்து உள்ள பாலத்தின் இரும்புப் பகுதிகள்
நாயாற்றுப் பாலத்தின் பல பகுதிகளிலும் இரும்புத் துருவை அவதானிக்க முடிகின்றது.இரும்பு(எஃகு) சட்டங்களால் ஆக்கப்பட்ட இந்த பாலத்தின் கறள்(துரு) பிடித்துள்ள பல பகுதிகளையும் நாயாற்றுப் பாலத்தில் மீன்பிடியில் ஈடுபட்டும் கடற்றொழிலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்படிக் கறள் பிடித்துக்கொண்டே போனால் விரைவில் இந்தப் பாலம் உடைந்துவிடும்.பயணத்திற்கு பெரியதும் கடினங்களை சுமக்கவேண்டி வரும்.
கொக்கிளாய் முகத்துவாரத்தில் பாலம் இல்லாததால் புல்லமோட்டைக்கு செல்வதற்கு நீண்ட சுற்றுப்பாதையை பயன்படுத்தும் தன்னுடைய அனுபவத்தில் உள்ள கடினத்தினையும் அவர் குறிப்பிட்டார்.
இருக்கும் பாலத்தினை பராமரிக்காது விடுவதாலேயே விரைவில் சிதைந்து பயன்படுத்த முடியாது போகும் சூழல் தோன்றுவதாக அவர் துறைசார் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டினையும் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலத்தின் சுரையாணிகள், எஃகு சட்டங்கள் என பல இடங்களிலும் கடுமையான துருப்படையை அவதானிக்க முடிகின்றது.
பாலத்தின் மேலுள்ள மிதி தட்டிலும் பல இடங்களில் இரும்பரிப்புக்குள்ளாகி கடுமையாக சேதமடைந்ததோடு சில இடங்களில் துவாரங்கள் தோன்றியும் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
உடைந்துபோன பாலத்தின் அணைக்கட்டுகள்
பாலத்தின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த அணைகள்,அலைதாங்கிகள் உடைந்து போயிருக்கின்றன.கடலின்பக்கமாக பாலத்தில் அமைக்கப்பட்ட சீமெந்து மூடப்பட்ட அணையின் மேற்பகுதி அப்படியே இருக்க கீழ் மற்றும் கீழ் உட்பகுதியில் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.
நாயாற்றுப் பாலத்தினை பார்வையிடுவதற்கென வரும் சுற்றுலாப் பயணிகள் கோறையாக உள்ள பாலத்தின் கடல்பக்கமுள்ள அணை மீது ஏறுகின்றனர்.
உடையும் நிலையில் உள்ள அந்த அணையின் மேற்பகுதி உடைந்தால் விபத்துக்குள்ளாகும் சூழல் தோன்றும் என எடுத்துச் சொன்னாலும் செவிமடுப்போர் குறைவே என்பது நாயாற்றுப்பாலத்தில் தொடர்ச்சியாக நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளரின் கூற்றாக இருக்கின்றது.
பாலத்தின் மேற்குப் பக்க அணைகளும் பாரியளவிலான சேதத்திற்குள்ளாகி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இம்முறை ஏற்பட்ட கடும் வெள்ளம் அணைக்கட்டை உடைப்பதில் பெரும் பங்கு வகித்திருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வற்றுப்பெருக்கை நித்தம் சந்திக்கும் நாயாற்றுப் பாலத்தின் கட்டுமானம் உறுதிமிக்கதாக இருக்கும் போது தான் நீண்டகால பயன்பாட்டினைப் பெறமுடியும்.
பாலத்தின் தரம் குறைவாக இருப்பதால் வேகத்தடை தேவையாக இருக்கிறது.பெரிய வேகத்தடையினால் பயணத்தின் போது அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக கொக்குத்தொடுவாயில் இருந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைக்காக செல்லும் முதியவர் தன் கருத்துக்களையும் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
எப்போது மீள்புனரமைப்பு?
நாயாற்றுப் பாலத்தின் மீள்புனரமைப்பு விரைவாக தேவையாக இருக்கும் என்பதனை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்த போதும் கண்டும் காணாது இருக்கும் போக்கினையே நாம் அவதானிக்கினறோம்.
மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்தப் பாலத்தினூடாக தங்கள் பயணங்களை மேற்கொண்ட போதும் பாலத்தின் நிலையினால் மக்களுக்கு ஏற்படப்போகும் துயரங்களை உணர்ந்து அவர்கள் நடவடிக்கைகளை எடுப்பதாக இல்லை.
பாலத்தின் ஓரங்களில் உள்ள குறியீட்டு பலகைகளும் கூட நிறம் மாறி வெளிறிப் போயிருக்கின்றன.
பாலத்தின் ஓரங்களில் உள்ள சீமெந்து மூடுபடை தொடர் வெடிப்புக்கு உள்ளாகி இருப்பதோடு உடைந்துபோயும் இருக்கின்றது.
அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாயாற்றுப் பாலத்தினை அபிவிருத்தி செய்து பயணங்களை இலகுவாக்குவதோடு அதிக வருமானத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதும் அத்தகைய எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என சமூக விடயங்களை ஆராய்வதில் அதிக கவனமெடுக்கும் சமூகவிட ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இரும்புத் துரு
இரும்பு நீரரிப்புக்குள்ளாகி சேதமடைதல் இரும்பரிப்பு என்று அழைக்கப்படும்.இது ஒரு இரசாயன மாற்றமாகும்.இரும்புதுரு மற்றும் கறள் என இந்தச் செயற்பாடு அழைக்கப்படும்.
இரும்புடன் நீரும் ஒட்சிசனும் சேர்ந்து தாக்கமடைவதால் இருப்பு ஒட்சைட் தோன்றும்.இது நீரேற்ற சேர்வையாகும்.
நீரும் ஒட்சிசனும் தொடர்ந்து கிடைக்கும் போது இரும்பு தொடர்ச்சியாக அரிப்புக்கு உள்ளாகும். இரும்பொட்சைட்டானது உறுதியற்ற படையாக இரும்பின் மீது அமைவதால் இரும்பு ஒட்சைட்டுக்கு கீழாக உள்ள இரும்பு தொடர்ந்து அரிப்புக்குள்ளாகியவாறே இருக்கும்.
இந்த நிலையால் இரும்பு வலுவிழந்துபோகும் என இரும்பின் துருப்பிடித்தல் செயற்பாட்டினையும் அதன் விளைவுகளையும் உயர்தர இரசாயனவியல் பாட ஆசிரியர் ஒருவர் எடுத்துரைத்திருந்தார்.
இரும்பு துருப்பிடித்தலை ஊக்குவிக்கும் காரணியாக உப்புக் காற்று இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிடிருந்தமையும் நாயாற்றுப் பாலத்தில் தொடர்ந்து உப்புக்காற்று வீசிக் கொண்டிருக்கும் ஏதுநிலை இருப்பதும் நோக்கத்தக்கது.