மதிப்பு வாய்ந்த நீதவான் பதவியை விட்டு விலகிய சரவணராஜா: விளக்கமளித்த சி.வீ.கே.சிவஞானம்
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தமது மதிப்பு வாய்ந்த நீதவான் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் சரவணராஜா தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காரணத்தினாலேயே தமது மதிப்பு வாய்ந்த நீதவான் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருக்கையில், நாட்டின் நீதி அமைச்சர் அவர் தாமாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார், இரண்டு இராஜதந்திரிகளை சந்தித்தார், தமது வாகனத்தை விற்றார் என்று கூறுகிறார்.
இவர் ஒரு அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி. பதவியை விட்டு விலகிய பின் ஒருவர் எதையும் விற்கலாம் யாரையும் சந்திக்கலாம் என்பதை தெரியாதவர் அல்ல.
நீதவான் குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக விகாரை கட்டுமானம் இடம்பெறுவது பற்றிய தள ஆய்வுக்கவாகவே நீதிமன்ற அலுவலர்கள் சகிதம் அங்கு சென்றுள்ளார்.
ஆய்வுப்பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்பொழுதே நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எதுவித அறிவித்தலோ, அழைப்போ, அனுமதியோ இல்லாமல் தமது பரிவாரங்களுடன் அங்கு பிரசன்னமாகியது மட்டுமன்றி நீதவானின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் அவருடன் வாதிட முயன்றிருக்கிறார்.
சரத் வீரசேகரவின் செயற்பாடுகள்
இது நீதிமன்றத்தையும் நீதவானையும் அவமதிக்கும் செயலாகும். அதனை நீதவான் நிராகரித்த காரணத்தால் சரத் வீரசேகர ஆத்திரப்பட்ட நிலையிலேயே காணப்பட்டார்.
நீதிமன்ற செயற்பாடுகளில் வேறு எவரும் தலையீடு செய்வது நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறானது என்று தெரிந்து கொண்டே சரத் வீரசேகர இவ்வாறு அடாவடித்தனமாக செயற்பட்டுள்ளார்.
இதன் போதே தமது ஆத்திரத்தை இவர் அங்கு வெளிப்படுத்தியது ஊடகங்கள் வெளிப்படுத்திய செய்தி. நாடாளுமன்ற அனுபவம் உள்ளவரும், பாதுகாப்புத் துறைசார் குழுவின் தலைவராக உள்ளவருமான சரத் வீரசேகரவின் அன்றைய செயற்பாடுகளே சரவணரராஜாவுக்கு தீவிர உயிர் அச்சுறுத்தலை தோற்றுவிப்பது இயல்பானதே.
இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் இணைந்து இனவாதத்தைக் காட்டியிருந்தார். இதற்கு மேலாக, நாடாளுமன்ற சிறப்புரிமையை கவசமாகப் பாவித்து சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் சரவணராஜாவுக்கு எதிராக ஆற்றிய உரை அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவது உறுதிப்படுத்தியிருக்கக்கூடியது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற அடிப்படைக் கோட்பாட்டின்படி செயற்பட்ட நீதிவானைப் பாதுகாக்க வேண்டிய நீதியமைச்சரும் சபாநாயகரும் பொருத்தமான நடவடிக்கை எதனையும் எடுக்கவுமில்லை. சபாநாயகர் ஒப்புக்கு ஒரு ஆலோசனையைத் தெரிவித்து விடயத்தை முடித்துக் கொண்டார்.
வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்
நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த வழிபாட்டு நிலையத்தை குருந்தூர்மலை பிக்கு மேற்கொண்ட நிர்மாண வேலைகள், அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் புத்தசாசன அமைச்சரின் வருகை, அவரது தனிப்பட்ட குடும்ப விடயங்களை விமர்சனம் செய்தமை எல்லாமே சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கும் என்பதை உணராதது மட்டுமன்றி, இவற்றை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம் இந்த நாட்டில் நீதி நிர்வாகம், இனவாதத்திற்குள்ளும் பௌத்த மதவாதத்திற்குள்ளும் சிக்கியுள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது.
இந்த இலட்சணத்தில்தான் உள்ளகப் பொறிமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும் சிங்கள ஏகாதியத்தியம் பேசிக்கொண்டிருக்கிறது.
எனவே சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சரத் வீரசேகர போன்றோரின் செயற்பாடுகள் பற்றி பூரணமாக விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.
அதேநேரம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், வலிந்து காணால்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கப்பெறும் வகையில் ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களுக்கு அமைய பன்னாட்டு
பங்களிப்புடன் கூடிய விசாரணைகள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இங்குள்ள
அனைத்து இராஜதந்திரிகளும் தர்மத்துடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
