முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வினைத்திறனற்ற செயற்பாடு: மாற்றங்களைக் கோரும் மக்கள்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மக்கள் முன்வைத்துள்ளனர்.
பொறுப்புடன் கூடிய செயற்பாடுகளே ஆரோக்கியமான வாழ்க்கையை மக்களுக்கு கொடுக்கும் வகையில் அமையும்.
காதுக்குள் புகுந்துகொண்ட வண்டினை (சக்கரப்பாண்டி) அகற்றுவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமளவுக்கு மாவட்ட வைத்தியசாலையின் செயலாற்றல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
மாவட்டத்தின் சுகாதார மற்றும் மருத்துவ ஆரோக்கிம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்புணர்ச்சி போதியளவில் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை
காதுக்குள் போன சக்கரப்பாண்டி பூச்சியை அடையாளம் கண்டு வெளியே எடுப்பதற்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஒருவரை அனுப்பும் சூழலில் தான் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலைமைகள் இருக்கின்றன என நிகழ்வுகளின் அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.
இத்தகைய சூழல் மாற்றியமைக்கப்பட்டு வினைத்திறனான செயற்பாட்டுக்கு வழிகோலும் முன்னெடுப்புக்கள் தேவை.
கருணாட்டுக்கேணியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 17.03.2024 அன்று அவரது வீட்டில் வைத்து காதுக்குள் சக்கரப்பாண்டி பூச்சி நுழைந்து அசௌகரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவர் உடனடியாக கொக்கிளாய் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு பொருத்தமான சிகிச்சையளிக்க முடியாத சூழலில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு உடன் மாற்றப்பட்டார்.
மாஞ்சோலை வைத்தியசாலை என மக்களால் அழைக்கப்படும் வைத்தியசாலையே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
மாஞ்சோலை வைத்தியசாலையில் உடன் சிகிச்சையை மேற்கொண்ட இரு வைத்தியர்கள் காதினை நன்கு பரிசோதித்து விட்டு காதுக்குள் ஒன்றும் இல்லை என கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து நிலவிய அசௌகரியத்தினால் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடம் மாற்ற நடவடிக்கைகளை எடுத்து மாற்றி விட்டனர்.
இதற்கமைய இரவே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பரிசோதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர் அவரின் காதினுள் (சக்கரப்பாண்டி) கறுப்பு நிறத்தில் பூச்சி இருப்பதனை உறுதி செய்துள்ளனர்.
காலை வரை பூச்சி வெளியேறுவதற்காக காதினுள் மருந்துத் திரவம் ஒன்றை விட்டுக்கொண்டிருந்ததாகவும் காலை 8.30 மணிவரை பார்த்து விட்டு அதற்குப் பிறகு எடுப்போம் என வைத்தியசாலையில், கூறியதாக பாதிக்கப்பட்ட நோயாளி குறிப்பிட்டிருந்தார்.
எனினும் 18.03.2024 அன்று நண்பகல் வரை உரிய வைத்தியர் வரவில்லை. நண்பகலின் பின்னரே காதினுள் இருந்த சக்கரப்பாண்டி பூச்சி வெளியே எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளி குறிப்பிட்டிருந்தார்.
வலியை தடுப்பதற்கென மருந்துகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தன் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.
போதியளவிலான வசதிகளை மேம்படுத்தியிருந்தால் கருணாட்டுக்கேணியில் இருந்து ஒரு நோயாளி யாழ்.போதனா வரை சென்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
இது தொடர்பில் பொருத்தமான மாற்றங்களை எதிர்பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இரத்த வங்கியின் செயற்பாடு
மேலும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குள் அமைந்துள்ள மாவட்ட இரத்த வங்கியில் இரத்ததானம் செய்துவரும் வழமையான இரத்த வழங்குநர் ஒருவர் உரிய நேரத்தில் இரத்தத்தினை வழங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கொரு தடவை இரத்தத்தினை வழங்கி வரும் இரத்தவகை O வினையுடய அவருக்கு அவரை பரிசோதிப்பதற்கு வைத்தியர் இல்லை. அதனால் வரும் வாரம் வாருங்கள் என இரு முறைகள் தன்னை திருப்பியனுப்பிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த குருதி வழங்குநர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் 45 தடவைக்கு மேல் குருதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உரிய நேரத்தில் குருதியை வழங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக குருத்திக்கொடையாளி குறிப்பிட்டிருந்த மையும் குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வைத்தியசாலை பொறுப்புடன் இயங்குமாயின் இது தொடர்பில் தீர்வொன்றினை பெற்றிருக்கலாம் என்பது விடய அவதானிப்பாளர்களின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னார்வலராக இரத்த வங்கிக்கு வந்து குருதியை கொடுக்க முன்வருவோர் திருப்பியனுப்பும் சூழலினை தவிர்த்துக் கொள்ள முயற்சிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
இது தொடர்பில் இனிவரும் காலங்களில் இந்த இடர்பாடுகளை களையும் பொருட்டான திட்டமிடல்களை மேற்கொள்ளல் வேண்டும் என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பயன்பாட்டுக்கு வராத பாதை
முல்லைத்தீவு வைத்தியசாலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய பாதை இதுவரை பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மாஞ்சோலை வைத்தியசாலையின் முன் வாசலில் இருந்து நேரடியாக பிரதான வீதியை அடையும் வகையில் புதிய பாதையினை அமைத்திருந்தனர்.
எனினும் அது இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பொருத்தமான முன்னெடுப்புக்களை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவாக அனுமதிப்பதில் என்ன சிரமம் இருந்து விடப்போகிறது என வைத்தியசாலைக்கு வருகைதந்து செல்லும் மக்கள் சிலரிடம் கேட்டபோது அவர்களின் கருத்தாக இவை அமைந்திருந்தமையும் இங்கே நோக்கத்தக்கது.
மாஞ்சோலை வைத்தியசாலைக்கான பாதையில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தியவாறே இருக்கின்றனர். ஈருருளி மற்றும் உந்துருளி போன்றவற்றுக்கான பாதுகாப்பு நிலையங்களையும் அடிக்கடி இடம்மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
வைத்தியசாலைக்கான உள் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளிலும் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதானது சிறந்த அடித்தள நிர்வாக கட்டமைப்பற்ற இயல்பினையே அவதானிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி விடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என சமூக விடயங்களை ஆராய்ந்து வரும் வரதன் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
மாவட்ட வைத்தியசாலைக்கென தனித்தவமான பொதுத்தன்மையோடு கூடிய நிலையான அபிவிருத்திச் செயற்பாடுகளை திட்டமிட்டு அவற்றை படிப்படியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.அப்போது தான் ஆரோக்கியமான மாற்றங்களை மாவட்டத்தில் ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிராந்திய சுகாதார சேவைகள்
பிராந்திய சுகாதார சேவைகளை முன்னெடுப்பதற்கு தனியான அலகொன்று செயற்பட்டு வரும் போதும் அவற்றின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பிராந்தியத்தில் ஏற்படும் நோய்களின் போது மாவட்ட வைத்தியசாலையே அதற்கு நேரடியாக முகம் கொடுக்கும் நிலை தோன்றும்.
எனினும் இது தொடர்பிலான எந்த அக்கறையையும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை, தண்ணீரூற்றில் சீரற்ற முறையில் குப்பைகள் வீசப்படுவதோடு ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கத்திற்கு மக்கள் ஆளாகின்றனர்.
வீதிகளிலும் சரி குப்பைகளை கொண்டு சென்று கொட்டும் கற்பூரப்புல்வெளி மற்றும் கயட்டைக் காட்டுப் பகுதியிலும் சரி குப்பைகளை உரிய முறையில் கொட்டுவதனை அவதானிக்க முடியவில்லை.
பொறுப்பற்ற முறையில் கொட்டிவிடுவதனையே அவதானிக்க முடிகின்றது. மாஞ்சோலை வைத்தியசாலையின் கழிவுகளையும் கயட்டைக்காட்டுப் பகுதியில் தான் கொட்டிவரும் போது அங்குள்ள நிலைமைகளையும் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு மாவட்ட வைத்தியசாலையான மாஞ்சோலை வைத்தியசாலைக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
பிரதேசங்களில் உள்ள சுகாதார நிலைமைகளை சீராக பேணும் போது தான் அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் ஆரோக்கியம் சீராக பேணப்படும்.அதன் மூலம் மாவட்ட வைத்தியசாலைக்கிருக்கும் சுமையை குறைத்துக் கொள்ள முடியும் என இது தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றும் வண்ணம் வைத்தியசாலைக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே பாதி வென்ற மாதிரி இருக்கும் என முள்ளியவளையில் வதியும் முதுசங்களில் பலர் ஒருமித்த கருத்தினை கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.
மாவட்ட வைத்தியசாலை சிறப்பாக செயற்படுவதற்கு தன்னை இன்னும் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.
குறைகளை சுட்டுவதன் நோக்கம் பிழை பிடிப்பதல்ல.பிழைகள் நடந்துவிடாது இருப்பதற்கே! என மாவட்ட வைத்தியசாலையின் சில பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த வைத்தியசாலை மற்றும் பிரதேச நலன்விரும்பியாக இனம் காணக்கூடிய ஒருவரின் கருத்தாக இவை இருந்ததையும் இங்கே குறிப்பிடலாம்.
உயர்தரத்திலான மருத்துவ சேவையை வழங்குவதற்கும் மருத்துவ ஆளணியின் உயர் சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பினை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானது போல் இருப்பதாக வைத்தியசாலைக்கு வெளியில் இருந்து நோக்கும் தமக்கு தோன்றுவதாக நிர்வாக சேவையில் கடமையாற்றி வரும் நண்பர் ஒருவருடன் உரையாடிய போது அவர் தன் கருத்துக்களையும் குறிப்பிட்டிருந்தார்.
பொறுப்போடு முன்னகர வேண்டும்
சிறந்த வைத்திய சேவை வழங்கும் இடமாக மக்களால் மெச்சிக் கொள்ளப்படும் ஒரு வைத்தியசாலையாக மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலை அமைய வேண்டும்.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் ஒருமித்துச் செயற்பட்டு மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என தாம் விரும்புவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்களின் பொதுவான கருத்தாக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |