முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம்! இன்று நீதிமன்ற விசாரணைகள் (Photos)
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த வாரம் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸார் நேற்று(18) நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
ஆனால் தற்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில் சிக்கல் நிலை இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் தென்பகுதியில் இனங்களுக்குள்ளே பிணக்குகள் தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் பிரதிநிதிகள் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளனர்.
புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கை
இதனையடுத்து குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.
இந்த வழக்கில் வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல்
அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியுள்ளார்.
கோரிக்கை
குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று, அங்கு இடம்பெற்று வரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு, நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்று வரும் குருந்தூர் மலைக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.