முல்லைத்தீவு வீசப்படிருக்கும் பொதிகளால் ஏற்படும் அச்சம்: அகற்ற கோரும் தன்னார்வலர்கள்
முல்லைத்தீவு தண்ணீரூற்றில் வீசப்படிருக்கும் பொதிகளால் மக்களிடையே அச்சவுணர்வு மேலிட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தண்ணீரூற்று வீதிகளில் உள்ள பொதிகள் மற்றும் பாலங்களிலும் வடிகால்களினுள்ளும் இவ்வாறு இருக்கும் பொதிகளாலேயே அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் மாசடைதல், நீரேந்து பகுதிகளில் ஏற்படும் நிரவல் என படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நாளடைவில் பாரிய சமூக சுற்றாடல் பிரச்சினையை தண்ணீரூற்று அதனையண்டிய பகுதிகளில் ஏற்படுத்தப் போவதாக எதிர்வு கூறப்படுகின்றது.
அதிக குப்பைகள் தேங்குவதால் மழைக்கால தொற்றுநோய் பரவல் அளவு அதிகரிக்கும் வாய்ப்புக்களை இவை இலகுவாக்கிவிடும் அபாயமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாலங்களின் கீழுள்ள நிலை
பொதியாக்கப்பட்ட கழிவுகளை பாலங்களினுள் வீசிவிட்டுச் செல்லும் இயல்பினை வன்னி உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் அவதானிக்க முடிகின்றது.
இது மோசமான கவலைக்குரிய மக்கள் இயல்பாக பரிணமித்து செல்வது பாரிய சவால்களை எதிர்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்லும் என சமூகவியல் கற்றலாளரான வரதனுடனான கலந்துரையாடலின் போது அவர் சுட்டிக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
தண்ணீரூற்றினை ஊடறுத்துச் செல்லும் A34 வீதியின் 42/1 என இலக்கமிடப்பட்ட பாலத்தின் கீழ் வீசப்பட்டிருந்த பொதியாக்கப்பட்ட கழிவுகளை படத்தில் காணலாம்.
திறந்த வெளியில் வீசப்படும் பயன்பாட்டுக் கழிவுகளையும் பிளாஸ்டிக் போத்தல்களையும் பாலத்தின் நீரோட்டத் திசையில் தேங்கியிருப்பதையும் அதில் அவதானிக்கலாம்.
இது தொடர்பில் பிரதேச சபையோ அல்லது பிரதேச செயலகமோ கவனமெடுப்பதாக தெரியவில்லை.
வடிகால்களின் நிலை
தண்ணீரூற்றில் உள்ள வீதிகளின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால்களில் பலவற்றின் நிலைகளும் கவலைக்குரிய நிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.
தேவையாக இருந்து வந்த வீதிகளின் புனரமைப்பு கிடைத்துள்ள சூழலில் அந்த புனரமைப்பினால் கிடைத்த வீதிக்கட்டுமானங்களை ஆரோக்கியமான முறையில் பேணிக் கொள்ள முற்படாத போக்கினை தண்ணீரூற்றில் அவதானிக்க முடிகின்றது.
புளியடிச்சந்தி (நெடுங்கேணி சந்தி என மக்களால் அழைக்கப்படும்) யில் இருந்து ஆரம்பிக்கும் தண்ணீரூற்று புளியங்குளம் வீதியில் (B372) புளியடிச் சந்திக்கு அண்மையில் உள்ள கரன் மோட்டார் திருத்தகத்திற்கு முன்னுள்ள நாற்சந்தியின் ஒரு பக்கத்தில் உள்ள வடிகாலின் நிலை கவலைக்குரிய நிலையில் இருப்பது படமாக்கப்பட்டிருக்கிறது.
சீமெந்தினால் வடிவமைக்கப்பட்ட வடிகாலினுள் குப்பைகள் சேர்ந்து வடிகால் அடைக்கப்பட்டுள்ளதோடு கழிவுப்பொதி ஒன்றும் வடிகால் துளையில் சிக்கிக்கொள்ளும் படி போடப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.
இது போலவே மாங்குளம் முல்லைத்தீவு வீதியை தண்ணீரூற்று புளியங்குளம் வீதியுடன் இணைக்கும் குறுக்கு வீதியான பழைய சந்தை பின் வீதியில் அவ்வீதி முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இணையும் இடத்திலும் குப்பைகள் சேர்ந்து வடிகால் துளையினை அடைக்கும் வகையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தண்ணீரூற்றில் உள்ள வீதிகளில் குப்பைகள் மற்றும் பொதியாக்கப்பட்ட குப்பைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் அச்சத்திற்கு இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கரைதுறைபற்று பிரதேச செயலகம்
தண்ணீரூற்று பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த அச்சம் தொடர்பில் கரைதுறைபற்று பிரதேச செயலகத்தின் மீது குற்றம் சுமத்தும் மக்கள் சிலரின் கருத்துக்களையும் இது தொடர்பில் பெற முடிந்தது.எனினும் அவர்கள் தங்களை குறிப்பீடு செய்துகொள்ள விரும்பியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தண்ணீரூற்று மற்றும் அதனையண்டிய பகுதிகள் கரைதுறைபற்று பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வருகின்றது.
வீடுகளில், வர்தக நிலையங்களில் உள்ள கழிவுகளை பொதியாக்கி பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனங்களில் எடுத்துச் செல்வதற்காக வைக்கப்படுகின்றது.
அவற்றை உடனுக்குடன் எடுத்தகற்றி விடும் போது இப்பிரச்சினையின் பெரும்பகுதி தீர்ந்து போய்விடும் என விபரிக்கும் சமூக ஆர்வலர் இதனை சரிவர செய்து கொள்ளாத போக்கினால் கரைதுறைபற்று பிரதேச செயலகம் மீதான மக்களின் குற்றச்சாட்டு ஏற்புடையது என குறிப்பிடுகிறார்.
அகற்றப்படாத பொதியாக்கப்பட்ட கழிவுகளை தொடர்ந்து வைத்திருப்பதால் ஏற்படும் அசௌகரியத்தினை தவிர்ப்பதற்காக அவற்றை பாலங்களினுள்ளும் வடிகால்களினுள்ளும் போட்டுவிட்டு போகும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதாக தன்னார்வலர் ஒருவர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
வீதியபிவிருத்தி திணைக்களம் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் என துறைசார்தோர் இது தொடர்பில் கவனமெடுத்து இச்சூழல் ஏற்படாது தடுத்திருக்க வேண்டும்.
எனினும் அவர்களால் சீர்செய்யப்படாதது தொடர்பில் பிரதேச செயலகம் கவனமெடுத்து ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முனைய வேண்டும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
சமுர்த்தி வேலைத்திட்டம்
சமுர்த்தி வேலைத்திட்டம் என்ற பெயரிட்டில் சமுர்த்தி நிதியினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டது போல் இப்போதும் கிராமங்களில், நகரங்களில் அவற்றின் தூய்மையான பராமரிப்பை பேணுமுகமாக செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கலாம்.
பாடசாலை மாணவர்களிடையேயும் விளையாட்டுக்கழகம் போன்ற இளைஞர் யுவதிகளை உள்ளீர்த்துள்ள பொது அமைப்புகள் மூலமாகவும் தத்தமது பிரதேச தூய்யையாக்கலையும் பேணலையும் முன்னெடுக்கலாம்.
அத்தகையதொரு முன்னெடுப்பு மேற்சொன்னது போன்ற அச்சநிலைக்கு இட்டுச்செல்லும் துர்பாக்கியத்தை எதிர்கொள்வதிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
எனினும் பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வு நோக்கிய செயற்பாடுகள் சிறந்த முறையில் பொறுப்புணர்சிமிக்கதாக முன்னெடுக்கப்பட வேண்டியதோடு அவை தொடர்ந்தும் நல்ல நிலையில் பேணப்பட வேண்டிய அவசியத்தை அனைவரும் புரிந்து செய்யப்பட வேண்டும் என்பதில் ஐயமிருக்கப்போவதில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |