பங்களாதேஷின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் : போராட்டக்காரர்கள் கோரிக்கை
நீண்டகால பிரதமர் சேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்று பங்களாதேஷின் மாணவர் போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்கள் கோரியுள்ளனர்.
நிர்வாகத்திற்கு எதிரான தேசிய எழுச்சியாக உருவெடுத்த அரச வேலைகளில் ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்ட இயக்கத்தை முன்னின்று நடத்திய 26 வயது சமூகவியல் மாணவர் நஹிட் இஸ்லாம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள்
எனவே, யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை தாம் வலியுறுத்தியுள்ளதாக நஹீட் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் முன்மொழிந்த அரசாங்கத்தை தவிர வேறு எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப்படாது. எந்த இராணுவ அரசாங்கமோ அல்லது இராணுவத்தின் ஆதரவுடன் அல்லது பாசிஸ்டுகளின் அரசாங்கமோ ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் இன்று இராணுவ அதிகாரிகளை சந்திக்க திட்டமிடப்பட்டதாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
84 வயதான யூனுஸ், 2006ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். "ஏழைகளுக்கு வங்கியாளர்" என்று அறியப்பட்ட அவர், பங்காளதேஷில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதோடு ஹசீனாவின் ஆட்சியின் போது அரசியல் அடிப்படையில் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |