மட்டக்களப்பில் வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்..!
மட்டக்களப்பு மாவட்டமானது, வெள்ளத்தில் அடிக்கடி பாதிக்கப்படுவதனால் எதிர்காலத்தில் விவசாய அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஊடாக கலந்தாலோசித்து நீர்ப்பாசன திட்டங்களை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று (20.01.2025) கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளருடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின் மாவட்டத்தின் வெள்ள பாதிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பிரச்சினைகள்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "அனர்த்த நேரங்களில் விவசாய நிலங்கள் பாதிப்பதை தடுக்கும் நோக்கிலும் சட்டவிரோத மண் அகழ்வு இந்த வெள்ள அனர்த்தத்திற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டமானது வெள்ளத்தில் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டமாக காணப்படுவதனால் எதிர்காலத்தில் விவசாய அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஊடாக கலந்தாலோசிக்கப்பட்டு மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் குளங்களைப் புனரமைப்பது ஊடாக இந்த வெள்ள அனர்த்ததில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது சம்பந்தமாக வெள்ள நீரினை சேமித்து விவசாயிகளுக்குரிய வெள்ள நிவாரணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |