அரசாங்கத்தின் பாதைகளை குழப்ப முயலும் எதிர்க்கட்சி - கந்தசாமி பிரபு குற்றச்சாட்டு
கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்களும், எதிர்க்கட்சியினரும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சரியான பாதையைக் குழப்புவதற்கும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் தொடர்ந்து முயன்று வருகின்றதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மற்றும் மாகாண அரசாங்கங்களின் இணைப்பில் புதிய கல்விச் சீரமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக தரம் 1 மற்றும் தரம் 2 வகுப்புகளுக்கு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கு முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான நிதி
கடந்த ஆட்சிக் காலங்களில் இத்துறைக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வரவு செலவுத் திட்டங்களில் கல்விக்கான நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் கல்வித்துறைக்கான முன்னுரிமை தொடர்ந்து உறுதி செய்யப்படும். மேலும், பாடசாலையின் கட்டட நிர்மாணங்கள், மண்டபக் குறைபாடுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு முற்றாக எதிராகச் செயல்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தினர். ஆனால், தற்போதைய அரசு அதற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பல்
கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சரியான பாதையைக் குழப்புவதற்கும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

நாட்டில் ஊழல் மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்கும், பாதாள உலகச் செயல்பாடுகள் மற்றும் ஆயுதக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் மிகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து தண்டனை வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னரே இத்தகைய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
