சி.அ. ஜோதிலிங்கத்திற்கு P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் இரங்கல்
தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைப் பரப்பில் ஆழமான தடம் பதித்தவரும், மூத்த சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், கல்வியாளருமான திரு சி.அ. ஜோதிலிங்கம் 09.10.2026 அன்று தனது 70ஆவது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்த செய்தி ஆழ்ந்த துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைக்கும், மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு சிந்தனையாளரை நாம் இழந்திருக்கிறோம்.
தமிழ்ச் சிந்தனைப் பரப்பின்
யாழ்ப்பாணம் குப்பிழான் மண்ணில் பிறந்த ஜோதிலிங்கம் அவர்கள், தனது இளமைப் பருவத்திலேயே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த அக்கறையுடன் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார்.

1970ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக உருவான தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கெடுத்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
அன்றிலிருந்து வாழ்வின் இறுதிவரை தமிழர் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய விடுதலை சார்ந்த சிந்தனைகளில் உறுதியுடன் பயணித்தார்.
அரசியல் ஆய்வாளர் என்ற வகையில், ஈழத்தமிழர் அரசியல், தமிழ்த் தேசியம், சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியல் போன்ற சிக்கலான விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனித்துவமான பங்களிப்பைச் செய்தார்.
பல தசாப்தங்களாக அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்ட நூல்களும் தமிழ்ச் சிந்தனைப் பரப்பின் முக்கியமான அறிவுசார் பங்களிப்புகளாகத் திகழ்கின்றன.
மக்களிடையே அரசியல் தெளிவு
அரசியல் நிகழ்வுகளை வெறுமனே பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், அவற்றின் பின்னணியையும் எதிர்கால விளைவுகளையும் ஆராய்ந்து மக்களிடையே அரசியல் தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவரது பணியின் தனிச்சிறப்பாக இருந்தது.

மேலும், மலையக மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் அரசியல், சமூக வாழ்வுடன் தொடர்புடைய கொள்கை விவாதங்களிலும் அக்கறையுடன் பங்களித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்களில் அறிவுசார் தளத்திலிருந்து குரல் கொடுத்த அவரது பங்களிப்பும் நினைவுகூரத்தக்கது.
ஒரு மனிதர் மறையலாம்; ஆனால் அவர் உருவாக்கிய சிந்தனைகளும், எழுப்பிய கேள்விகளும், சமூகத்தில் ஏற்படுத்திய அறிவுத் தாக்கமும் மறைந்துவிடுவதில்லை.
ஜோதிலிங்கத்தின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மட்டுமல்ல; தமிழ்த் தேசிய அரசியல் ஆய்வுலகிற்கும், கல்வியியல் துறைக்கும், சமூகச் செயற்பாட்டுத் தளத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவு விட்டுச்செல்லும் அறிவுசார் வெற்றிடத்தை நிரப்புவது எளிதானதல்ல.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கமானது, ஜோதிலிங்கத்தின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடனும் தனது துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறது. அவர்களுக்கான எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam