துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி! துப்பாக்கி தொடர்பில் அம்பலமான தகவல்
தற்போது துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரி, தனது சேவை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை பாதாள உலகக் கும்பல் தரப்புக்கு வழங்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில், குறித்த பொலிஸ் அதிகாரி கல்கிஸ்ஸை பொலிஸில் ஒரு டி-56 ரக துப்பாக்கியையும், 30 தோட்டாக்களையும் பெற்றுக்கொண்டு, பணியில் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர், கல்கிஸ்ஸை - படோவிட்ட பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஒரு குறிப்பிட்ட நபரிடம் கொடுத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸ்
பின்னர், அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (11) டி-56 ஆயுதத்தை கொண்டு செல்வதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் மற்றொரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அதிகாரி கலபிடமட பகுதியைச் சேர்ந்தவராவார். அவருக்கு படோவிட்ட அசங்க என்ற நபர் தலைமையிலான பாதாள உலகக் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வங்கிப் பதிவுகள்
நாட்டை விட்டு தப்பிச் சென்ற அதிகாரியின் வங்கிப் பதிவுகள் மற்றும் சொத்துக்கள், அவருடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வெளிநபர்களைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸட அதிகாரியின் தாய் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களை 02 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்ற அனுமதியைபெற்றுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை தற்போது நாடுவதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)