வடக்கு தொழில்துறை சம்மேளனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ள கனேடிய தமிழர் பேரவை
கனேடிய தமிழர் பேரவை உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக இலங்கையில் வடக்கு தொழில்துறை சம்மேளனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த மூலோபாய கூட்டாண்மையானது இலங்கையில் இருந்து, குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இருந்து உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்து, கனேடிய சந்தைக்கு அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“இந்த ஆண்டு தொடக்கத்தில் கனேடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்த முயற்சிக்கான அடித்தளம் போடப்பட்டது.
உள்ளூர் உற்பத்தி
இந்த விஜயத்தின் போது, உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சாத்தியமான கூட்டாண்மை பற்றி தெரிந்துகொள்ள வடக்கு தொழில்துறையின் பிரதிநிதிகளை நாங்கள் சந்தித்திருந்தோம். அதன் அடுத்தகட்டமாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், கனேடிய தமிழர் பேரவை உள்ளூர் தயாரிப்புகளை கனடாவில் அதன் பல்வேறு நிகழ்வுகள் மூலம் ஊக்குவிக்க முன்வந்துள்ளது.
இதில் மிகப்பெரிய வருடாந்திர தெரு திருவிழாவான தமிழர் தெருவிழாவும் அடங்கும். தமிழ் சமூகம் மற்றும் கனடாவில் உள்ள பரந்த பொதுமக்களுக்கு எம் தாயக தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் கனேடிய தமிழர் பேரவை அதன் தளங்களையும் வளங்களையும் முழுமையாக பயன்படுத்தவுள்ளது.
இம்முயற்சியானது தாயக தயாரிப்புகளுக்கு பரந்த சந்தையை உருவாக்குவது மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசங்களின் நிலையான அபிவிருத்திக்கும் பங்களிக்கும் என கனேடிய தமிழர் பேரவை நம்புகிறது.
இந்த தயாரிப்புகளை உலக சந்தையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வடக்கில் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதை கனேடிய தமிழர் பேரவை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உள்ளூர் தொழில்கள் மற்றும் சமூகங்களுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். இந்த முயற்சியை நேரடியாக அனுபவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும், ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மார்க்கம் வீதியில் இடம்பெறவுள்ள தமிழர் தெருவிழாவுக்கு வருகை தருமாறு அன்போடு அனைவரையும் அழைக்கின்றோம்.
தாயகத்தில் இருந்து நம்மூர் தயாரிப்புக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது தமிழ் சமூகத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஆதரவளிப்பதற்கான கனேடிய தமிழர் பேரவையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |