ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு ஆட்சேபங்களை கருத்திற் கொள்ளாது வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் ச.தொ.ச. ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தியதாகவும், அதன் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் உத்தரவு
இந்த வழக்கு தொடர்பில் ஜோன்ஸ்டன் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபங்களை கருத்திற் கொள்ளாது வழக்கைத் தொடர்ந்தும் நடத்த உயர்நீதிமன்ற நீதியரசர் நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வழக்கின் முன் விசாரணை எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த போது சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
வழக்கு விசாரணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இதற்கு முன்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் கையொப்பமிடாததால், பிரதிவாதிகளுக்கு எதிராக நியமிக்கப்பட்ட வழக்கை ஆணைக்குழு முன்னெடுக்க முடியாது என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனையை முன்வைத்தனர்.
எனினும் நீதிமன்றம் குறித்த ஆட்சேபணையை இன்று (10.05.2023) புறம் தள்ளி வழக்கைத் தொடர்ந்தும் விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.



