சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கேள்விக்குரியது: விஜயதாச ராஜபக்ச
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குரியது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், சபாநாயகர் அரசியல் சட்டத்தை மீறி இணையப் பாதுகாப்பு யோசனையை அங்கீகரித்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. யோசனையை நிறைவேற்றுவது சபாநாயகர் அல்ல.
அரசியலமைப்பு சபை
அதை நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களே மேற்கொள்கின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் கூட சபாநாயகர் பங்கேற்க அனுமதி இல்லை. அத்துடன் உயர்நீதிமன்றம் எந்த யோசனையையும் திருத்தும்படி நாடாளுமன்றை வற்புறுத்துவதில்லை.
அத்துடன் ஒரு யோசனை அரசியலமைப்பின் எந்தப் பிரிவையும் மீறுகிறதா இல்லையா என்பதை மட்டுமே பார்க்கிறது. இவ்வாறான நிலையில் சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? எனவே சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குறியாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமது நிலைப்பாட்டை ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு சபையினால் புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமை சட்டவிரோதமானது என எதிர்க்கட்சிகள் கூறுவதையும் அமைச்சர் ராஜபக்ச கண்டித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபையின் நான்கு உறுப்பினர்கள் தென்னகோனுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்ததாகவும், இரு உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் எனவே அரசியலமைப்பு சபையில் பெரும்பான்மையானவர்கள் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு தெளிவாக ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |