மட்டக்களப்பில் அன்னை பூபதி 38வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத் தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் மாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்வு இன்று (19.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
2 நிமிட மௌன அஞ்சலி
இதன்போது, அன்னை பூபதி அவர்களின் சமாதியில் நிழற்படத்திற்கு மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அன்னாரின் மகள் மற்றும் உறவினர்களும் சமாதியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்றலில், 1988ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி, இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, ஏப்ரல் 19ஆம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.