வெளிநாட்டில் பூபதி அம்மாவிற்கு பூ வைக்கிறார்கள்! தாயகத்தில் ஏன் இப்படி செய்கிறீர்கள் கண்ணீருடன் மகள் (Video)
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது கல்லறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
1988.03.19ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் (19.03.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு - நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுத் தூபியில் அவரின் பிள்ளைகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இவர் மட்டக்களப்பில், அகிம்சை ரீதியில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணியாவார்.
'உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்', 'புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தே மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988.03.19ஆம் திகதி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி ஆரம்பித்தார்.
பத்துப் பிள்ளைகளுக்கு, தாயார் இவர். நீர் மட்டும் அருந்திச் சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை.
அன்னை பூபதி அவர்கள் முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவை இழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
அன்னை பூபதியின் நினைவுத் தூபி
அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அவர் உயிர்நீத்தார்.
