இளம் தாய் மற்றும் மகள் படுகொலை - திடீர் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது
அங்குருவாதொட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வரகாகொட சல்கஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் கைது
குறித்த சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் சில வாழை மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அவரை துரத்திச் சென்று அவருடன் மோதிலில் ஈடுபட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை முயற்சி
அப்போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் அதிகாரிகளை பல தடவைகள் தாக்க முற்பட்டபோதும், முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் குத்திக்கொண்டுள்ளார்.
சந்தேக நபர் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அங்குருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.